ADDED : அக் 30, 2025 10:55 PM
சென்னை:  'வங்கிகளுக்கு ஆள் தேர்வு செய்வதாக, போலி இணையதளங்களில் வெளியாகும் விளம்பரங்களை பார்த்து, இளைஞர்கள் ஏமாற வேண்டாம்' என, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் எச்சரித்து உள்ளது.
அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும், ஐ.பி.பி.எஸ்., என்ற வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம், ஆள் தேர்வை நடத்துகிறது.
ஆனால், சில தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், ஐ.பி.பி.எஸ்.,சு டன் இணைந்து செயல்படுவதாக, அதன் லோகோவை இணைத்து விளம்பரம் வெளியிட்டு, இளைஞர்களை கவர்கின்றன.
இந்நிலையில், ஐ.பி.பி.எஸ்., வெளியிட்டுள்ள எச்சரிக்கை:
எங்கள் லோகோவையோ, இணையதள முகவரியையோ பயன்படுத்த, யாருக்கும் உரிமை வழங்கப்படவில்லை; அவ்வாறு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வசதியாக, பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
மேலும், அவ்வாறான போலி நிறுவனங்களின் வாக்குறுதிகளை நம்பி, தேர்வு கட்டணம், படிப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட எதையும் கொடுத்து ஏமாற வேண்டாம். அவ்வாறான பாதிப்புகளுக்கு, ஐ.பி.பி.எஸ்., பொறுப்பேற்காகது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

