அன்புமணி தனிக்கட்சி துவங்கினால் நானே பெயர் வைக்கிறேன்: ராமதாஸ்
அன்புமணி தனிக்கட்சி துவங்கினால் நானே பெயர் வைக்கிறேன்: ராமதாஸ்
ADDED : நவ 07, 2025 07:27 AM

சென்னை: அன்புமணியின் பேச்சும், செயலும் அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
அரசியலில் அன்பு மணிக்கு மத்திய அமைச்சர் பதவியும், பா.ம.க., தலைவர் பதவியும் கொடுத்து, தவறு செய்து விட்டேன்.
பா.ம.க.,வில் பிளவு ஏற்பட்டு விட்டது என மக்களும், பிற கட்சிகளும் நினைக்கும் அளவுக்கு அன்புமணியின் பேச்சும், செயலும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன. அன்புமணி கும்பலில் இருக்கும் சிலரை தவிர, மற்ற அனைவரும் நான் வளர்த்த பிள்ளைகள்.
சில காரணங்களுக்காக அங்கே சென்று, என்னையும், கட்சியின் கவுரவ தலைவர் மணியையும் திட்டுகின்றனர். பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களில் மூவர், அன்புமணி பக்கம் தெரியாமல் சென்று விட்டனர்.
மக்களுக்காக எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்; அதில் வன்முறை இருந்ததில்லை.
கடந்த, 20 ஆண்டுகள் என்னுடன் இருந்த ஒருவருக்கு, பழைய 'இன்னோவா' காரை கொடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் என்னையும், என்னோடு இருப்பவர்கள் பற்றியும், அவதுாறு பரப்பும் புதிய உத்தியை கையாள்கின்றனர்; வன்முறையையும் கையாள்கின்றனர்.
அன்புமணியிடம் இருப்பது கட்சி அல்ல; ஒரு கும்பல். பா.ம.க., பெயர், கொடி, என் பெயரை, அவர் பயன்படுத்தக் கூடாது. வேண்டுமானால் தனி கட்சி துவங்கலாம். பொருத்தமான பெயரை நானே வைக்கிறேன். அன்புமணி கும்பல் தாக்க வந்தாலோ, திட்டினாலோ, பா.ம.க.,வினர் எதிர் வினையாற்றக் கூடாது.
வரும் டிச., 30ம் தேதி ஆத்துார், தலைவாசலில் பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில், பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டு, யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு கூறினார்.

