சிபாரிசு இருந்தால் தான் துாசு தட்றாங்க தண்டனை பெற்ற போலீசார் புலம்பல்
சிபாரிசு இருந்தால் தான் துாசு தட்றாங்க தண்டனை பெற்ற போலீசார் புலம்பல்
ADDED : ஜன 03, 2024 09:30 PM
மதுரை:தமிழக காவல் துறையில், துறை ரீதியான நடவடிக்கைக்குள்ளான போலீசார், அமைச்சு பணியாளர்களின் தண்டனையை ரத்து செய்ய கோரும் பைல்களை சிபாரிசு இருந்தால் மட்டுமே டி.ஜி.பி., அலுவலகம் பரிசீலிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.
காவல் துறையில் கவனக்குறைவாகவோ, ஒழுங்கீனமாகவோ, சட்டத்திற்கு புறம்பாக நடந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சஸ்பெண்ட், பதவி உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விசாரணைக்கு பின் தவறு இல்லாதபட்சத்தில் தண்டனையை எஸ்.பி., முதல் டி.ஜி.பி., வரையிலான அதிகாரிகள் ரத்து செய்ய அதிகாரம் உண்டு. சிலர் நீதிமன்றம் வாயிலாக தண்டனை ரத்து உத்தரவு பெறும்பட்சத்தில் டி.ஜி.பி., கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. துறை ரீதியான தண்டனை பெற்ற நுாற்றக்கணக்கானோரின் மேல்முறையீட்டு மனுக்கள் டி.ஜி.பி., அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.
பாதிப்பு
பாதிக்கப்பட்டோர் கூறியதாவது:
எங்களின் கடைசி நம்பிக்கை டி.ஜி.பி., அலுவலகம் தான். ஆனால் இரு ஆண்டுகளுக்கும் மேலாக பைல்கள் நகராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்தால் உடனடியாக அந்த பைல்களை 'துாசி' தட்டி தண்டனையை ரத்து செய்து உத்தரவிடுகின்றனர்.
சிபாரிசு இல்லாதபட்சத்திலும், நீதிமன்றம் வாயிலாக உத்தரவு வாங்கினாலும் அந்த பைல்களை அதிகாரிகள் பொருட்படுத்துவதில்லை. இதனால் எங்களது பதவி உயர்வு உள்ளிட்டவை பாதித்துள்ளன. எங்களுக்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் இன்று பதவி உயர்வு பெற்று விட்டனர். நாங்கள் இன்னும் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.