ADDED : மார் 27, 2025 12:46 AM
சென்னை:''மாநிலத்தின் நிதி நிலைக்கேற்ப, புதிய போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் கட்டப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
காங்., - ராமச்சந்திரன்: அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார்கோவிலில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்திற்கு, புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்; இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கட்டடம் கட்ட, 2.59 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மே மாதம் கட்டுமானப் பணி துவக்கப்படும்; அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் பணி முடிக்கப்படும்.
ராமச்சந்திரன்: நன்றி. அறந்தாங்கி நகரில் மக்கள்தொகை பெருகி வருகிறது. எனவே, கூடுதல் போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.
அல்லது தற்போதுள்ள போலீஸ் நிலையத்தில், கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு சப் - இன்ஸ்பெக்டர்கள், ஏழு ஏட்டுகள், 12 முதல்நிலை காவலர்கள், 39 இரண்டாம் நிலை காவலர்கள் பணிபுரிகின்றனர்.
அறந்தாங்கி உட்கோட்டத்தில் ஐந்து போலீஸ் நிலையங்கள், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகின்றன. எனவே, அறந்தாங்கி போலீஸ் நிலையத்தை இரண்டாக பிரித்து, கூடுதல் போலீஸ் நிலையம் அமைக்கும் தேவை எழவில்லை
ராமச்சந்திரன்: கூடுதல் போலீஸ் நிலையம் அமைக்காவிட்டால், தற்போதுள்ள போலீஸ் நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். ஆவுடையார் ஒன்றியம், கரூர் போலீஸ் நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
அதற்கு நிரந்தர கட்டடம் கட்ட வேண்டும். காவலர் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்துள்ளன. புதிய குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும்.
முதல்வர்: கரூர் போலீஸ் நிலையம் சொந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. கடந்த 2018ல் அதன் மேல்தளம் பழுதடைந்ததால், அரசுக்கு சொந்தமான இ - சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. பழுதுடைந்த கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது.
தி.மு.க., - கணபதி: சென்னை மதுரவாயல் தொகுதி, அயப்பாக்கம் ஊராட்சியில், 1.25 லட்சம் மக்கள் உள்ளனர். இங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: அயப்பாக்கம் ஊராட்சி அருகில், நான்கு தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. எனவே, அயப்பாக்கத்தில் புதிய தீயணைப்பு நிலையம் தேவை இல்லை.
அ.தி.மு.க., - கந்தசாமி: கோவை மாவட்டம், சூலுாரில் வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் உள்ளது. நிரந்தர கட்டடம் கட்டித் தர வேண்டும்.
முதல்வர்: இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும். சபையில் உள்ளவர்கள், போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 72 புதிய போலீஸ் நிலையம், 23 தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தின் நிதி நிலைக்கேற்ப, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, சாத்தியக்கூறு உள்ள இடங்களில் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மானிய கோரிக்கையில் சில அறிவிப்புகள் வரும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.