தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வந்து பார் துணை முதல்வர் உதயநிதி 'தரமான' பேச்சு
தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வந்து பார் துணை முதல்வர் உதயநிதி 'தரமான' பேச்சு
ADDED : பிப் 20, 2025 06:50 PM
''உலக தலைவரை மதிக்க தெரியாத கத்துக்குட்டி உதயநிதி,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
கரூரில், பா.ஜ., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது.
அதில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில், 2026ல், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பஞ்சம் பிழைப்பதற்காக தமிழகத்தை விட்டு வேறு இடத்துக்கு போக வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு மோசமான ஆட்சியாக இருக்கிறது. இந்த முறை தீய சக்தியான, தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்று மக்கள் முடிவோடு இருக்கின்றனர்.
தமிழக பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது கிடையாது. ஆனால், மத்திய பட்ஜெட்டை குறை சொல்ல மட்டுமே மேடை ஏறுகிறார்.
கடந்த காங்., ஆட்சியை விட, தமிழகத்துக்கு நேரடியாக மத்திய அரசு கொடுக்கும் பணம், 5 மடங்கு அதிகரித்து உள்ளது.
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போது, இதுவரை 'கோ பேக்' மோடி என்று சொல்லி வந்தோம். இனி, 'கெட் அவுட்' மோடி என்று சொல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி பேசுகிறார்.
நீங்கள் சரியான ஆளாக இருந்தால், பிரதமர் மோடியை, 'கெட் அவுட்' சொல்லிவிட்டு வந்து பாருங்கள். உங்கள் வீட்டுக்கு வெளியில், 'பால்டாயில் பாபு' என்று போஸ்டர் ஒட்டுவேன். ஒரு உலக தலைவரை மதிக்க தெரியாத கத்துக்குட்டி உதயநிதி.
நீங்கள் விரும்பும் மொழியை படிக்கலாம் என்று, மத்திய அரசின் கல்வி கொள்கையில் கூறுப்படுகிறது. கடந்த, 4 ஆண்டுகளில் தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வி துறைக்கு, 1.55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகளில் எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. ஏன் என்று கேட்டால், 2,500 கோடி ரூபாய் மத்திய அரசு தரவில்லை என்று பொய்யாகக் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று, சென்னையில் துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டி:
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மரியாதை இல்லாமல் அரசியல்கட்சித் தலைவர்களை ஒருமையில் பேசுகிறார். நிதி பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார். கேட்கிற நிதியை கொடுக்க துப்பில்லை.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, என் வீட்டு முன்பாக போஸ்டர் ஒட்டுவேன்; அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவாமல் விட மாட்டேன் என்றேல்லாம் சவால் விட்டிருக்கிறார். பதில் சவால் விடுக்கிறேன்; தைரியம் இருந்தால், அண்ணா சாலை பக்கம் வந்து பார். இது, உதயநிதிக்கும், தமிழக பா.ஜ., தலைவருக்குமான தனிப்பட்ட பிரச்னை இல்லை.
தமிழகத்தின் நிதி உரிமையைத்தான் கேட்கிறோம். துப்பு இருந்தால், நிதியை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் சட்டவிரோதமாக நடத்தப்படவில்லை; மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்றுத்தான் நடத்தப்படுகிறது. தனியார் பள்ளியில், இலவச உணவு, சீருடை எல்லாம் வழங்கப்படுவது இல்லை. அதனால், தனியார் பள்ளியை அரசுப் பள்ளியுடன் ஒப்பிடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-

