அரசை எதிர்த்து பேசினால் குண்டர் சட்டம்: சீமான் விமர்சனம்
அரசை எதிர்த்து பேசினால் குண்டர் சட்டம்: சீமான் விமர்சனம்
ADDED : டிச 10, 2025 06:21 AM

சென்னை: “கொலை செய்வோர் கூட, 30 நாட்களில் வெளியே வருகின்றனர். ஆனால், அரசை எதிர்த்து பேசினால் குண்டர் சட்டத்தில் கைது செய்கின்றனர்,” என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள புரட்சி தமிழகம் கட்சி தலைவர் 'ஏர்ப்போர்ட்' மூர்த்தியை சந்தித்த பின், சீமான் அளித்த பேட்டி:
ஏர்போர்ட் மூர்த்தி, தன்னை தாக்க வந்தவர்களை தற்காப்புக்காக தாக்கினார். தமிழக அரசு, இந்த அளவுக்கு அவரை சிறைப்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை.
இல்லையென்றால், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்திருப்போம். திடீரென குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். அரசுக்கு எதிராக பேசினால், முகநுாலில் பதிவிட்டால் குண்டர் சட்டம் பாய்கிறது.
கொலை செய்வோர், லஞ்சம் வாங்குவோரை விட்டுவிட்டு, பேசுவோர் மற்றும் எழுதுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்கின்றனர். அதிகாரம் மிக வலிமையானது.
ஆனால், இங்கு இருக்கும் அதிகாரம் கொடுமையானது. நீதிபதிகள் அறிவுறுத்தல் குழு உள்ளது. அங்கு, அரசியல் பழிவாங்குவதற்காக போடப்பட்ட வழக்கு என ஆவணங்களை ஒப்படைத்தாலும், குண்டர் சட்டம் சரியானது என்றால் அப்படிப்பட்ட அமர்வே அவசியமற்றது.
ஏர்போர்ட் மூர்த்தியை இவ்வளவு நாள் சிறையில் வைப்பது, அவரது கருத்துகளை முடக்கும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.
கொலை செய்தவர்கள், 90 நாட்களில் வெளியே வருகின்றனர். குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என, 30 நாட்களிலும் வெளியே விடுகின்றனர். தற்காப்புக்காக தாக்கியவரை, இவ்வளவு நாட்கள் சிறையில் அடைப்பது நியாயமற்றது.
அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். ஆனால் தி.மு.க., ஆட்சியில், சட்டத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரிகள் செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

