4 ஆண்டுகளில் 31 காவல் மரண வழக்கு; விசாரணைக்கு ஐ.ஜி., தலைமையில் குழு
4 ஆண்டுகளில் 31 காவல் மரண வழக்கு; விசாரணைக்கு ஐ.ஜி., தலைமையில் குழு
UPDATED : ஜூலை 23, 2025 04:33 AM
ADDED : ஜூலை 23, 2025 02:59 AM

சிவகங்கை:கடந்த 4 ஆண்டுகளில் நடந்துள்ள 31 'லாக்அப்' மரணங்களின் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த ஐ.ஜி., தலைமையில் குழு அமைத்து போலீசாருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு சிவகங்கை கலெக்டர் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் பாதுகாப்பு நிறுவன காவலாளி அஜித்குமார் 29, நகை திருட்டு புகாரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். இதையடுத்து மானாமதுரை டி.எஸ்.பி.,யாக இருந்த சண்முகசுந்தரம், வேன் டிரைவர் ராமச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஐந்து போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இக்கொலை குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சுகுமாறன் தலைமையில் குழுவினர் விசாரித்து கலெக்டர் பொற்கொடியிடம் அறிக்கை அளித்தனர்.
அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 4 ஆண்டு கால ஆட்சியில் 31 காவல் மரணங்கள் நடந்துள்ளது. இதில் 2 வழக்குகளில் மட்டுமே குற்ற அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மற்ற வழக்குகள் விசாரணை முடியவில்லை. இது போன்ற காவல் மரண வழக்கு விசாரணைகளை விரைந்து முடித்து, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தண்டனை பெற்றுத்தர, ஐ.ஜி., தலைமையில் குழு அமைத்து விசாரித்து விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும்.
அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ., விரைந்து விசாரணை செய்து ஆக., 20 க்குள் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அஜித்குமார் மீது புகார் தெரிவித்த பேராசிரியை நிகிதாவிடம் உண்மை தன்மையை விசாரித்து அவரையும் கைது செய்ய வேண்டும். நிகிதா கேட்டுக்கொண்டதையடுத்து புகாரை விசாரிக்க பரிந்துரை செய்த ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை கண்டறிந்து, அவர்கள் மீதும் சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜித்குமார் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்திற்கு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டு மனை வழங்க வேண்டும். தம்பி நவீன்குமாருக்கு, அரசின் நேரடி நிர்வாகத்தில் வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பம், சாட்சிகளுக்கு 'சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்' உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.