15 பதிவு மாவட்டங்களில் சிறப்பு தணிக்கை பத்திரங்களை ஆராய ஐ.ஜி., உத்தரவு பத்திரங்களை ஆராய ஐ.ஜி., உத்தரவு
15 பதிவு மாவட்டங்களில் சிறப்பு தணிக்கை பத்திரங்களை ஆராய ஐ.ஜி., உத்தரவு பத்திரங்களை ஆராய ஐ.ஜி., உத்தரவு
ADDED : மே 13, 2025 04:26 AM
சென்னை : நிர்வாக பணியில் இருக்கும் மாவட்ட பதிவாளரே தணிக்கை மேற்கொண்ட 15 பதிவு மாவட்டங்களில், சிறப்பு தணிக்கை நடத்த, பதிவுத்துறை ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
சார் -- பதிவாளர் அலுவலகங்களில் பதிவாகும் பத்திரங்களில், வருவாய் இழப்பு உள்ளிட்ட தவறுகள் நடந்துள்ளதா என்பது, தணிக்கை வாயிலாக கண்டுபிடிக்கப்படும்.
தடை விதிப்பு
இதற்காக ஒவ்வொரு பதிவு மாவட்டத்துக்கும், ஒரு தணிக்கை மாவட்ட பதிவாளர் நியமிக்கப்படுவது வழக்கம். இதில், சில இடங்களில் தணிக்கை மாவட்ட பதிவாளர் இடம் காலியாக இருப்பதை பயன்படுத்தி, நிர்வாக மாவட்ட பதிவாளரே தணிக்கை செய்துள்ளார்.
இன்னும் சில இடங்களில், தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், நிர்வாக பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், பத்திரங்களை தணிக்கை செய்ய பதிவுத்துறை தடை விதித்தது. இந்நிலையில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவு:
டி.ஐ.ஜி.,க்கள் அனுப்பிய விசாரணை அறிக்கை அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி, கடலுார், மதுரை ஆகிய ஆறு மண்டலங்களில், தேர்வு செய்யப்பட்ட 15 பதிவு மாவட்டங்களில், சிறப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
யார் எந்த பதிவு மாவட்டத்தில் தணிக்கை செய்ய வேண்டும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
வாராந்திர அறிக்கை
அவர்கள், 2023 முதல், 2025 மே வரையிலான காலத்தில், அந்தந்த பதிவு மாவட்டங்களில், அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவான பத்திரங்களை முழுமையாக சிறப்பு தணிக்கை செய்ய வேண்டும்.
அதுவும் முதலில், 2024 ஏப்., முதல், 2025 ஏப்., வரையிலான காலத்தில் பதிவான பத்திரங்களை, சிறப்பு தணிக்கை செய்ய வேண்டும்.
இது தொடர்பான வாராந்திர அறிக்கையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை, 11:00 மணிக்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.