'டிஜிட்டல்' நில அளவை பணி வி.ஏ.ஓ.,க்கள் புறக்கணிப்பு
'டிஜிட்டல்' நில அளவை பணி வி.ஏ.ஓ.,க்கள் புறக்கணிப்பு
ADDED : அக் 24, 2024 10:16 PM
சென்னை:தமிழகத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களை, 'டிஜிட்டல்' முறையில் அளவீடு செய்யும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை, கிராம நிர்வாக அலுவலர் வழியாக மேற்கொள்ள, தமிழக அரசு முடிவு செய்தது.
இப்பணிகளை செய்வதற்கு, மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்வைத்தனர்.
இது தொடர்பாக, கடந்த ஜன., 8ம் தேதி, வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர்.
அப்போது, நில அளவைக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும்,பதிவுக்கு 10 ரூபாய் வழங்கவும் அதிகாரிகள் சம்மதித்தனர். ஆனால், உரிய நேரத்தில் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.
இதனால், வி.ஏ.ஓ.,க்கள் அப்பணியை புறக்கணித்தனர். நேற்று மீண்டும் சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் அமைப்புகளின் நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். இதில், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதையடுத்து, டிஜிட்டல் நில அளவை பணியை முற்றிலுமாகபுறக்கணிப்பதாக, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.