ADDED : நவ 16, 2024 02:45 AM

சென்னை:ஹரியானா மாநிலம், சோனிபட் நகரில் உள்ள ஜின்டால் குளோபல் பல்கலை வளாகத்தில், அரசியலைப்பு சட்டம் உருவாக்கி, 75 ஆண்டுகளை கொண்டாடும் வகையில், நாட்டின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகம், 10,000 சதுரடியில் அமைக்கப்பட்டு உள்ளது.
அதை, அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நவ., 26ம் தேதி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைக்க உள்ளார்.
அதில், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கையால் எழுதப்பட்ட அசல் பிரதி, சட்டங்களை விளக்கும் ஓவியங்கள், சிற்பங்கள், கண்காட்சிகள், அஞ்சல் தலைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.
இவை குறித்து, அங்கு வருவோருக்கு உரையாடல் வாயிலாக வழிகாட்ட, பாதியளவு மனித உருவம் உள்ள 'ரோபோ' வைக்கப்பட உள்ளது.
இதை, சென்னை ஐ.ஐ.டி., வடிவமைத்துள்ளது. இந்த ரோபோ, நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும். ஹிந்தி, ஆங்கிலத்தில் பார்வையாளர்களுடன் உரையாடும்.
இதில், '3டி' வடிவத்தில் படங்களை விளக்கும் வகையில், 'டிஸ்பிளே'க்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோ வடிவமைப்பு புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும், இந்திய கல்வி மற்றும் கலாசார மேம்பாட்டுக்கான முன்னோட்டமாகவும் கருதப்படுகிறது.
இது, சென்னை ஐ.ஐ.டி.,யின் ரோபோட்டிக்ஸ் துறையின், முக்கிய சாதனைகளில் ஒன்றாக பாராட்டப்படுகிறது. இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் வடிவமைப்பு பொறியியல் துறை தலைவர் வெங்கடேஷ், பாலசுப்பிரமணியன் ஆகியோர், ரோபோ குறித்து சென்னை ஐ.ஐ.டி.,யில் செயல் விளக்கம் அளித்தனர்.
நிகழ்வில், ஜின்டால் குளோபல் பல்கலை துணைவேந்தர் ராஜ்குமார், ரோபோவை வடிவமைத்த மாணவர்கள் பங்கேற்றனர்.