இஸ்ரோவுடன் இணைந்து புதிய சாதனை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி நம்பிக்கை
இஸ்ரோவுடன் இணைந்து புதிய சாதனை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி நம்பிக்கை
ADDED : ஜன 27, 2025 03:42 AM

சென்னை: ''சென்னை ஐ.ஐ.டி., - இஸ்ரோவுடன் இணைந்து, புதிய சாதனைகளை படைக்கும்,'' என, அதன் இயக்குனர் காமகோடி நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை ஐ.ஐ.டி.,யில் நேற்று, 76வது குடியரசு தின விழா நடந்தது. அதன் இயக்குனர் காமகோடி, தேசியக் கொடியேற்றி பேசியதாவது:
நாட்டின் மிக முக்கிய கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி, நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில், பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
உலகளாவிய அங்கீகாரம்
உலகில் முதன் முதலாக, குழந்தையின் மூளை அமைப்பை '3டி' மாடலில் உருவாக்கி உள்ளது. இது நரம்பியல் சார்ந்த சிகிச்சைகளில், அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும்.
சக்திவாய்ந்த 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்' உருவாக்கி உள்ளது. இது, விளையாட்டு வீரர்களுக்கான, 'ஸ்போர்ட்ஸ் இன்ஜுரி' சிகிச்சையில், துல்லியமான அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவற்றை செய்து, அவர்களை மேலும் சாதிக்க துாண்டும்.
கை செயலிழப்பில் உள்ளவர்களுக்கு, ரோபோ உதவியுடன் அவர்களின் மறுவாழ்வுக்கு உதவும் வகையில், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி.,யில், 455 கண்டுபிடிப்புகளுக்கு உரிமம் பெறப்பட்டதில், 47 உரிமங்களுக்கு, உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
எதிர்காலத்தில், நிலவு, செவ்வாய் உள்ளிட்டவற்றில், மனித குடியேற்றத்துக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்த, சென்னை ஐ.ஐ.டி., - இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி, 3டி பிரின்டிங் முறையில் விண்வெளிக்கான கட்டுமானங்களின் சிறப்பை மேம்படுத்துதல், அதில் எடுத்துச் செல்லப்படும் பொருட்களில், நீடித்த தன்மையை கட்டமைப்பது, அதன் வெப்பநிலை குறித்த ஆய்வு மற்றும் எரிபொருள் மேம்பாடு உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, 1.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
'ஸ்வயம் பிளஸ்'
தண்ணீர் இல்லாத கான்கிரீட் முறையை கண்டறிந்து சோதித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையிலும், பல்வேறு புதுமைகளை செய்து வருகிறது.
இதுபோன்ற அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளை நோக்கி செல்லும் இளம் விஞ்ஞானிகள், சுயதொழில் துவங்க, 'ஸ்வயம் பிளஸ்' என்ற திட்டத்தை துவக்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

