பாலியல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை; போலீசாருக்கு மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவு
பாலியல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை; போலீசாருக்கு மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவு
UPDATED : ஜன 07, 2025 08:21 AM
ADDED : ஜன 07, 2025 06:21 AM

சென்னை: 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்றங்கள் மீதான புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசாருக்கு, மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பாலியல் ரீதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, புகார் கிடைத்த, 30 நிமிடங்களுக்குள் விசாரணை அதிகாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை, உடனடியாக மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும். தாமதமின்றி மருத்துவ உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சொந்தங்களிடம் இருந்து, உடனடியாக எழுத்து மூலமாக புகார் பெற்று, அவர்களுக்கு சி.எஸ்.ஆர்., வழங்க வேண்டும். அவர்கள் எழுத படிக்க தெரியாதவர்களாக இருந்தால், ஆலோசகர் ஒருவரை நியமித்து, அவரை சாட்சியாக பயன்படுத்த வேண்டும்.
பாலியல் வன்கொடுமைமாதிரிகளை, ஐந்து நாட்களுக்குள் சேகரிக்க வேண்டும். புகார்கள் கிடைத்த, 24 மணி நேரத்திற்குள், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும்.
குற்றம் செய்த நபர், எக்காரணத்தை முன்னிட்டும் தப்பி செல்லாதபடி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், காலதாமதம் கூடாது.
அலட்சியமாக செயல்பட்டது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐ.ஜி.,க்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

