ADDED : ஜன 08, 2025 01:47 AM

சென்னை:சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் கட்டுமான நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில், 'எஸ்.பி.எல்., இன்ப்ராஸ்ட்ரக்சர்' என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளை செய்து வருகிறது. வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நேற்று, வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அதேபோல, சென்னை, சாத்தங்காடு, பூந்தமல்லியில் உள்ள, 'ஜே.ஆர்.மெட்டல்ஸ்' நிறுவனத்திலும், வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஈரோடு மாவட்டம், செட்டிபாளையத்தில், 'என்.ஆர்.குரூப்ஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் ராமலிங்கம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் நெருங்கிய உறவினர்.
இந்நிறுவனம் தனியார், அரசு கட்டுமான ஒப்பந்த பணிகளை செய்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு சென்னை, கோவை மற்றும் பெங்களூரில் அலுவலகங்கள் உள்ளன. கடந்த 2016ல், ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத, 152 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது. இந்நிலையில், ராமலிங்கம் தொடர்புடைய, 25க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.