விவசாயத்தில் இருந்து வேறு துறைகளுக்கு மாறுவோர் அதிகரிப்பு: திட்டக்குழு தகவல்
விவசாயத்தில் இருந்து வேறு துறைகளுக்கு மாறுவோர் அதிகரிப்பு: திட்டக்குழு தகவல்
ADDED : ஜூன் 10, 2025 03:52 AM

சென்னை: ''கிராமங்களில் அதிகமான நபர்கள் விவசாயத்தில் இருந்து, வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது. அதிக ஊதியமும், நிலையான வேலையும், இளைஞர்களை வேளாண் சாராத வேலைவாய்ப்புக்கு ஈர்த்துள்ளன,'' என, தமிழக திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
சென்னை எழிலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில், 'வேளாண் சாராத வேலைவாய்ப்பு; நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 - தமிழகம் தொலைநோக்கு ஆவணம்; தமிழக வாகன தொழில் துறை எதிர்காலம்; தமிழகத்தை அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி வடிவமைத்தல்' என்ற நான்கு ஆய்வு அறிக்கைகள், முதல்வர் ஸ்டாலினிடம் மாநில திட்டக்குழு சார்பில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.
ஊரகப்பகுதிகளில் வேளாண் சாராத வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு, மாநில ஊரக வேலை வாய்ப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தி உள்ளது.
அதிக அளவிலான நபர்கள், விவசாயத்தில் இருந்து வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது. கட்டடம் மற்றும் உற்பத்தி துறை போன்ற, வேளாண் சாராத துறைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது.
12 கிராமங்களில் ஆய்வு
தற்போது, 75 சதவீதத்திற்கும் அதிகமான ஆண் தொழிலாளர்கள், 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள், வேளாண் அல்லாத துறைகளில் வேலை செய்யும் நிலை உள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த, 12 கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கிராமங்களில், 10 ஆண்டுகளுக்கு முன், நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தேன். தற்போது, மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதிக ஊதியமும், நிலையான வேலையும், இளைஞர்களை வேளாண் சாராத வேலைவாய்ப்புகளுக்கு ஈர்த்துள்ளன.
கட்டட தொழில், ஆண் தொழிலாளர்களின் முதன்மையான துறையாக உள்ளது. உற்பத்தி துறை, பெண்களுக்கு முக்கிய வேலைவாய்ப்பு துறையாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்த, தமிழக அரசு நிறுவன கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இதற்காக, உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.
இது தொடர்பான ஆவணம், ஒவ்வொரு குறிக்கோளுக்கான உத்திகள் மற்றும் செயல் திட்டத்தை வகுத்திடும் போது, அரசின் முக்கிய கொள்கை முயற்சிகளை முன்னிறுத்தி உள்ளது.
இந்தியாவின் முக்கிய வாகன உற்பத்தி மையமாக தமிழகம் உள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் ஒவ்வொரு ஐந்து கார்களில், ஒன்றை உற்பத்தி செய்வதுடன், 45 சதவீத ஏற்றுமதிக்கு பங்களிக்கிறது.
வாகன உற்பத்தியில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்ற ஏதுவாக, அரசின் கொள்கை வகுத்தல், பசுமை எரிபொருள் பயன்பாடு, அதிகளவில் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை இந்த அறிக்கை வழங்குகிறது.
வேலைவாய்ப்பு
மேலும், 2030க்குள் ஏற்பட உள்ள மாற்றங்கள், அதற்கு ஏற்ப பணியாளர்களுக்கு மின் வாகனம், பேட்டரி, ஆட்டோமேஷன், மின்னணு உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
தமிழகத்தை அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி வடிவமைத்தல் அறிக்கை, உகலளாவிய திறன் மையங்கள், உற்பத்தி துறையின் எதிர்கால வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.
இந்த அறிக்கையில், தொழில் துறை வளர்ச்சியை மேலும் வேகப்படுத்த, புதுமை, தொழில்நுட்பம், நிலைத்தன்மையை அடிப்படையாக கொண்டு, உற்பத்தியை மறுசீரமைக்கும் வழிமுறைகள் விரிவாக விவரிக்கப்படுகின்றன.
இது, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை வலுப்படுத்துவது, வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை நிலைத்தன்மையுடன் முன்னேற்றவும் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.