துணை வேந்தர் காலியிடம் அதிகரிப்பு இருவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு
துணை வேந்தர் காலியிடம் அதிகரிப்பு இருவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு
ADDED : ஆக 22, 2025 12:41 AM
சென்னை:தமிழக பல்கலைகளில், துணை வேந்தர் காலியிடம் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார், அழகப்பா பல்கலை துணை வேந்தர்களுக்கு, ஓராண்டு பதவி காலம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுரை காமராஜ், அண்ணா, சென்னை, பாரதியார், பெரியார், பாரதிதாசன், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல், வேளாண், அண்ணாமலை, தஞ்சாவூர் தமிழ் பல்கலை உள்ளிட்ட, 12 பல்கலைகளில் துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கிடையில், திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணை வேந்தர் சந்திரசேகர், வேலுார் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலை துணை வேந்தர் ஆறுமுகம், சிவகங்கை மாவட்டம் அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி ஆகியோரின் பதவிக்காலம் நேற்று நிறைவடைந்தது. அவர்களில் சந்திரசேகர், ரவி ஆகியோரின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து, தமிழக கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் பல்கலை துணை வேந்தர் ஆறுமுகத்திற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, தமிழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை, 13 ஆக அதிகரித்துள்ளது .