UPDATED : ஜன 20, 2024 03:03 AM
ADDED : ஜன 18, 2024 11:58 PM

சென்னை: தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு, சேலத்தில் 21ம் தேதி நடக்கிறது. அது குறித்து கட்சியின் தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:
இந்தியா வலிமையாக இருக்க வேண்டும் என்றால், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என்பதே மாநில சுயாட்சி கொள்கையின் நோக்கம். அது நிறைவேற்றப்பட்டால் தான், உண்மையான கூட்டாட்சி கருத்தியலின்படி, இந்தியா வலிமையுடன் செயல்பட முடியும்.
அராஜக போக்கு
ஆனால், 10 ஆண்டுகால பா.ஜ. ஆட்சியில், கல்வி உரிமை, சட்ட உரிமை என, மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்கிறது. ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜக போக்கு அதிகரிப்பதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக, நியமன பதவியில் உள்ள கவர்னரை வைத்து அரசை நடத்த நினைக்கும் எதேச்சாதிகார போக்கு என்பது, மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல; இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது. உயர்ந்த பொறுப்புக்கு தகுதி இல்லாதவர்களாக கவர்னர்கள் மலிவான, தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை நாடு காண்கிறது.
திருவள்ளுவரில் துவங்கி, தெருவில் நடந்து போவோர் என, எல்லார்மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை, மத்திய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை, ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை தி.மு.க.வுக்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர, அவசிய தேவை இருக்கிறது.
உரிமை மீட்பு முழக்கம்
ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்தில் இருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தை மக்கள் காண, இண்டியா கூட்டணியின் முன்னெடுப்புகள் துவங்கி உள்ளன.இந்த பொருத்தமான சூழலில் தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தை மையமாக வைத்து, இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடக்கவுள்ளது. மாநில உரிமைகளை வென்றெடுப்பது தான் மாநாட்டின் நோக்கம் என இளைஞரணி செயலர் உதயநிதி திட்டமிட்டு உள்ளார்.
நாடு, லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. தேர்தலுக்குப்பின் அமைய இருக்கும் இண்டியா கூட்டணியின் ஆட்சி, மாநில உரிமைகளை மதிக்கிற ஆட்சியாக அமைய வேண்டும்; அமையும். அதற்கெல்லாம் தொடக்கமாக சேலம் மாநாடு அமையப் போகிறது. சேலத்தில் என் கண்கள் உங்கள் முகங்களைத்தான் தேடும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

