மாமல்லையில் ஆசிய 'சர்பிங்'; சாதிக்க காத்திருக்கும் இந்தியா
மாமல்லையில் ஆசிய 'சர்பிங்'; சாதிக்க காத்திருக்கும் இந்தியா
ADDED : ஆக 03, 2025 06:09 AM

சென்னை: மாமல்லபுரத்தில் முதல் முறையாக ஆசிய அளவில் 'சர்பிங்' எனும், அலைச்சறுக்கு போட்டி இன்று துவங்குகிறது.
இந்திய 'சர்பிங்' கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு சர்பிங் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, நான்காவது 'ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் - 2025' போட்டியை நடத்துகின்றன.
கடல் சார் விளையாட்டான, 'சர்பிங்' போட்டி, மாமல்லபுரத்தில் இன்று துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.இதில், இந்தியா, ஆப்கானிஸ்தான், சீனா, கொரியா, இலங்கை, சவுதி அரேபியா, தாய்லாந்து உட்பட, 20 நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர்.
ஓபன் மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோர் என, இரு பிரிவுகளாக போட்டிகள் நடக்க உள்ளன.
இந்திய அணியில், தமிழகத்தின் ஸ்ரீகாந்த், கிஷோர், ஹரிஸ், பிரஹலாத், தைன் அருண், கமிலினி, சிருஷ்டி செல்வம் உட்பட 14 வீரர் - வீராங்கனையர் சாதிக்க காத்திருக்கின்றனர்.