விவசாயத்தில் சந்தையை திறக்க முடியாது அமெரிக்க வர்த்தக பேச்சில் இந்தியா உறுதி
விவசாயத்தில் சந்தையை திறக்க முடியாது அமெரிக்க வர்த்தக பேச்சில் இந்தியா உறுதி
UPDATED : ஜூலை 04, 2025 05:07 AM
ADDED : ஜூலை 03, 2025 11:02 PM

புதுடில்லி:விவசாயம், பால்வள பிரிவுகளில் சந்தையை திறந்து விட முடியாது என இந்தியா தெரிவிப்பதால், அமெரிக்காவுடனான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகிறது.
விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
எனினும், இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்து வருகிறது. அன்னிய முதலீடுகளை அனுமதிக்காமல் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் விவசாயம், பால்வளம் ஆகியவற்றில் சந்தையை திறந்துவிட அமெரிக்கா கோரி வருகிறது. இதற்கு, இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
குறிப்பாக, சோளம், எத்தனால், சோயாபீன் மற்றும் பால் பொருட்கள் பிரிவுகளை ஒப்பந்த கட்டமைப்புக்குள் கொண்டு வர இயலாது என இந்தியா கைவிரித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் விவசாயத் துறை மற்றும் விவசாயிகளை வலுவிழக்கச் செய்யும் எந்த ஒரு முடிவுக்கும் இந்தியா சம்மதிக்காது என தெரிவித்தார்.