2040ல் நிலவில் கால் பதித்து இந்தியர் திரும்புவர்: 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் நம்பிக்கை
2040ல் நிலவில் கால் பதித்து இந்தியர் திரும்புவர்: 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் நம்பிக்கை
ADDED : மார் 18, 2025 04:34 AM

சென்னை : ''வரும் 2040ல், இந்திய விஞ்ஞானிகளால் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டில், இந்தியர்கள் நிலவில் கால் வைத்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பும் நிகழ்வு நடக்கும்,'' என, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ'வின் தலைவர் நாராயணன் கூறினார்.
ஆராய்ச்சிப் பணி
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்த, 65 ஆண்டுகளாக, நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களில், மிகப்பெரிய பணிகளை இஸ்ரோ செய்துஉள்ளது. 20,000 பணியாளர்களை கொண்டுள்ள, இஸ்ரோ நிறுவனம் மட்டும், இப்பணியில் ஈடுபடவில்லை.
நாட்டில் உள்ள பல்வேறு தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள், இஸ்ரோவுடன் கைகோர்த்துள்ளன. இந்த விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளில், அனைவரும் இந்தியர் என்ற ஒரே எண்ணத்துடன் பங்களிக்கின்றனர். இஸ்ரோ நிறுவனம், மிகவும் திறந்த மனதுடன் ஒவ்வொருவரையும் அணுகுகிறது.
தற்போது பணியில் சேர்ந்த இன்ஜினியராக இருந்தாலும், பிரச்னைக்கான தீர்வை தந்தால், அதை அங்கீகரிக்கிறது. எவர் ஒருவரையும் விட, இஸ்ரோவும், இந்தியாவும் தான் உயர்ந்தவை என்ற எண்ணமே எங்கள் அனைவருக்கும் உள்ளது.
இஸ்ரோ துவங்கியபோது, பழைய சைக்கிள் மற்றும் மாட்டு வண்டியில், ஐந்து கிலோ, பத்து கிலோ எடை சுமக்கும் ராக்கெட்டை துாக்கிக்கொண்டு சென்ற, நம் முன்னோர்களின் அர்ப்பணிப்பு உணர்வால் தான், இன்று புவியின் வட்டப்பாதையில், இந்தியாவின், 55 செயற்கைக்கோள்கள் சுற்றுகின்றன.
இதன் எண்ணிக்கை, இன்னும் மூன்று அல்லது ஐந்தாண்டுகளில், 155 செயற்கைக்கோள்களாக மாறும். விண்வெளி தொழில்நுட்பத்தில், நம் நாடு உலகிற்கே தலைமை தாங்கும் நிலை விரைவில் வரும்.
தற்போது, நாசாவின் செயற்கைக்கோள், நம், 'மார்க் 3' ராக்கெட்டின் வாயிலாக ஏவப்படுகிறது. இதை, பிரதமர் மோடி அமெரிக்காவில் அறிவித்தபோது, நம் விஞ்ஞானிகளின் மனதில் ஏற்பட்ட பெருமிதத்தை, எந்த பணத்தாலும் ஈடு செய்ய முடியாது.
நாசாவுடன் இணைந்து, நிசா செயற்கைக்கோள் தொழில்நுட்ப ஆய்விலும் இஸ்ரோ ஈடுபடுகிறது. அதேபோல, நம் செயற்கைக்கோள்கள் அமெரிக்க ராக்கெட்டிலும் ஏவப்பட உள்ளன.
'ஜி20' நாடுகளுக்காக, நம் தொழில்நுட்பம் மற்றும், 40 சதவீத பொருள் செலவுடன், 'ஜி20' செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது. நம்மை பொறுத்தவரை, எந்த ஆராய்ச்சியிலும் தொய்வில்லை; தாமதமாகலாம். அதை, தோல்வியை தவிர்த்து, நம் வெற்றியையும், இலக்கையும் எளிதாக்குவதற்கான படிப்பினை காலமாகவே கருத வேண்டும்.
அனுமதி
முக்கியமாக, அமெரிக்க விண்கலத்தை பூமியில் இறக்குவதில் ஏற்படும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கான காலம் அதிகரிப்பதால் தான், சுனிதா வில்லியம்சை அழைத்து வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதுபோன்ற அனைத்து விஷயங்களையும், இஸ்ரோ கூர்ந்து கவனித்து, நிறைய கற்றுக் கொள்கிறது. அடுத்து, மனிதனை ஏற்றிச் செல்லும், 'வயமுத்ரா' ஆய்வில் தீவிரமாகி உள்ள இஸ்ரோ, இந்தாண்டில், 5 பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளை ஏவ உள்ளது.
நம் பிரதமரின் கூற்றுப்படி, வரும், 2040ல், இந்திய விஞ்ஞானிகளால், முழுக்க முழுக்கு உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டில், இந்தியர்கள் ஏறி, நிலவில் கால் வைத்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பும் நிகழ்வு நடக்கும். அதற்கான பணிகளுக்கு அனுமதி கிடைத்ததும், அதில் ஈடுபட காத்திருக்கிறோம். இவ்வாறு நாராயணன் கூறினார்.