UPDATED : நவ 10, 2026 06:41 PM
ADDED : நவ 10, 2026 06:37 PM
சென்னை: ‘‘தீபாவளியின் போது காற்று மாசு ஏற்படுவதை குறைக்க, பசுமை பட்டாசு உற்பத்தியை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:
தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசு குறித்த விபரங்களை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னை வளசரவாக்கத்தில், மூன்றாம் ஆண்டாக, இப்போதும், ‘மிக மோசம்’ என்ற நிலைக்கு, காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 17 மாவட்டங்களில், 39 இடங்களில் காற்று மாசு, 34 இடங்களில், ஒலிமாசு ஆய்வு செய்யப்பட்டது.
இதில், 4 இடங்களில் மிக மோசம், 6 இடங்கள் மோசம்; 25 இடங்களில், ஓரளவு பாதிப்பு என்ற அடிப்படையில் காற்று மாசு பதிவாகி உள்ளன. காற்று மாசு அதிகரிப்பு பிரச்னைக்கு, பசுமை பட்டாசுகளே மாற்றாக அமைந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து நிறுவனங்களும், பசுமை பட்டாசு உற்பத்திக்கு மாற வேண்டும். இம்மாதம் கடைசியில், பசுமை பட்டாசு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான பயிலரங்கு, சிவகாசியில் நடத்தப்பட உள்ளது. அதில் பங்கேற்க அனைத்து உற்பத்தியாளர்களும் அழைக்கப்படுவர். இதனால், அடுத்த ஆண்டு பெரும்பாலான நிறுவனங்கள், பசுமை பட்டாசுகளை விற்பனைக்கு அனுப்பும். இதனால், காற்று மாசு அளவு, 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
