அனைத்து தொழிலாளர்களுக்கும் காப்பீடு: பட்டாசு ஆலையை ஆய்வு செய்த முதல்வர் அறிவுரை
அனைத்து தொழிலாளர்களுக்கும் காப்பீடு: பட்டாசு ஆலையை ஆய்வு செய்த முதல்வர் அறிவுரை
ADDED : நவ 10, 2024 01:04 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே கன்னிச்சேரிபுதுாரில் உள்ள பட்டாசு ஆலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த போது, அனைத்து தொழிலாளர்களுக்கும் காப்பீடு செய்ய அறிவுறுத்தினார்.
விருதுநகரில் இரண்டு நாட்கள் நிகழ்வாக கள ஆய்வு, கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், புதிய கலெக்டர் அலுவலக திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் நேற்று வருகை தந்தார்.
நான்கு வழிச்சாலை சத்திர ரெட்டியபட்டி விலக்கில் கட்சியினர், மக்கள் வரவேற்பு அளித்தனர்.
ராம்கோ விருந்தினர் மாளிகைக்கு சென்று விட்டு, கன்னிச்சேரிபுதுார் மேலச்சின்னையாபுரத்தில் உள்ள மதன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை முதல்வர் ஆய்வு செய்தார்.
பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வைப்பறை, தயாரிக்கப்படும் இடங்கள், பட்டாசுகள் வைப்பறை, திரி வைப்பறை போன்ற இடங்களை பார்வையிட்டார்.
அந்த ஆலையில், 80 பேர் பணிபுரிகின்றனர். இதில், 36 பேர் பெண்கள். அவர்களிடம், 'மகளிர் உரிமை தொகை கிடைக்கிறதா?' என, கேட்டறிந்தார்.
பட்டாசு ஆலை இதுவரை விபத்து ஏற்படாமல் பாதுகாப்புடன் செயல்பட்டு வருவதை கேட்டறிந்த முதல்வர், அனைத்து ஆலைகளிலும் பசுமையான சூழலை பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தவும் அறிவுறுத்தினார்.
பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் முறையான காப்பீடு வசதியை செய்யுமாறு, உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார். தொழிலாளர்களிடம் அவர்கள் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், எம்.எல்.ஏ., சீனிவாசன், முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் கந்தசாமி, தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குனர் ஆனந்த் உடனிருந்தனர்.
ஏ.டி.ஜி.பி., சட்டம் -- ஒழுங்கு டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சிம்ஹா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.