இன்சூரன்ஸ்: ஜி.எஸ்.டி., குறைந்தாலும், கூடினாலும் சுமை நமக்கு மட்டும் தானா?
இன்சூரன்ஸ்: ஜி.எஸ்.டி., குறைந்தாலும், கூடினாலும் சுமை நமக்கு மட்டும் தானா?
UPDATED : செப் 07, 2025 11:40 PM
ADDED : செப் 07, 2025 11:39 PM

சமீபத்தில், சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி முழுமையாக நீக்கப்பட்டு, ஒரு பெரிய நிவாரணம் கிடைத்தது. ஆனால், இந்த வரி நீக்கத்தின் பலன், உண்மையாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
![]() |
ஜி.எஸ்.டி., நீக்கப்பட்டதால், காப்பீட்டு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து ஜி.எஸ்.டி. வசூலிக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் தாங்கள் வாங்கும் சேவைகளுக்காக செலுத்திய ஜி.எஸ்.டி-யில் உள்ளீட்டு வரிக் கடன் (ITC) பெற முடியாது.
இதனால், அந்த இழப்பை ஈடுகட்ட, அவர்கள் பிரீமியத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய 18 சதவீத சேமிப்பு முழுமையாக கிடைக்காது.
ஆனால், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்ட போது என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாருங்கள் - அப்போது கிடைத்த ஐ.டி.சி., எனும் உள்ளீட்டு வரிப் பயனை நமக்கு பகிர்ந்து அளித்தனவா?
ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒவ்வொரு துறையிலும் விலை குறைக்கப்பட்டதா என்று கண்காணித்து, அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு கடத்தப் படுவதை உறுதி செய்தது.
ஜி.எஸ்.டி., நீக்கத்தின் பலன் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை, கவுன்சில் அதே விடாமுயற்சியுடன் கண்காணிக்கும் என்று நம்புகிறோம்.
இல்லையென்றால், வரிகள் அதிகரித்தாலும் சரி; குறைந்தாலும் சரி, செலவு நம் சுமை என்று மட்டுமே என்று ஆகிவிடும்.
இப்போது, ஜி.எஸ்.டி., நீக்கப்பட்டதிலிருந்து நீங்கள் நன்மையைப் பெற்றதாகக் கொள்வோம். நீங்கள் மருத்துவ காப்பீட்டுக்காக 50,000 ரூபாய் செலுத்தினால், 18 சதவீத ஜி.எஸ்.டி., சேர்த்து, அது 59,000 ரூபாய் ஆகும்.
ஜி.எஸ்.டி., இல்லாமல் இருந்தால், 9,000 ரூபாய் சேமிக்கலாம். அந்த தொகையை நீங்கள் என்ன செய்வீர்கள்? புதிய இயர்பட்ஸ் வாங்க, ஸ்மார்ட் வாட்ச் வாங்க அல்லது நேரடியாக சேமிக்க விரும்பலாம்.
ஆனால், அந்த கூடுதலான 9,000 ரூபாயை செலவிட தயாராக இருந்தீர்கள் என்பதால், அதை மேலும் காப்பீட்டுக்காக செலவிடலாமே?
உங்கள் கவரேஜை அதிகரிக்க, புதிய காப்பீடு வாங்க, ஓய்வூதியத் திட்டத்தைத் துவங்க, அல்லது இதுவரை புறக்கணிக்கப்பட்ட வீட்டு தீ விபத்து காப்பீடை எடுக்க முன் வரலாமே?
விலை அதிகரிக்கும் போது எல்லாம் செலவுகளை சரிசெய்து, கொஞ்சம் குறைத்து, இன்னொன்றை மாற்றி, செலவை பட்ஜெட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம்.
அதேபோல் விலை குறையும்போதும், அந்த சேமிப்பை நமக்கே பயன் தருமாறு முடிவெடுக்க வேண்டும். நீங் கள் எதைச் செய்தாலும், அது ஒரு உறுதியான முடிவாக இருக்கட்டும்; சேமிப்பை உங்கள் வங்கிக் கணக்கில் சும்மா கிடக்க விடாதீர்கள்.
க. நித்யகல்யாணி
காப்பீடு குறித்த நிபுணத்துவ எழுத்தாளர், பெருநிறுவன வரலாற்றாசிரியர்.