sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'தேவாரம் வந்து திருவாசகம் படிப்பார்' போலீஸ் அதிகாரியின் சுவாரசிய சுயசரிதை

/

'தேவாரம் வந்து திருவாசகம் படிப்பார்' போலீஸ் அதிகாரியின் சுவாரசிய சுயசரிதை

'தேவாரம் வந்து திருவாசகம் படிப்பார்' போலீஸ் அதிகாரியின் சுவாரசிய சுயசரிதை

'தேவாரம் வந்து திருவாசகம் படிப்பார்' போலீஸ் அதிகாரியின் சுவாரசிய சுயசரிதை


ADDED : பிப் 24, 2024 09:21 PM

Google News

ADDED : பிப் 24, 2024 09:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'எங்கள் விடுதியில் தங்கும் நாட்களை சிறப்பாக அனுபவியுங்கள்... புன்னகையுடன் சிறிது ஆடையும்அணியுங்கள்...'

கோவா விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியபோது இந்த வாசகத்தைக் கண்டதாக பதிவு செய்துள்ளார் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அவரது சுயசரிதை, 'மூணாறில் இருந்து மெரினா வரை' என தமிழில் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் ஐந்து முதல்வர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை உயர்வு நவிற்சியின்றி வெளிப்படுத்துகிறது இந்த புத்தகம். தமிழக வரலாற்றில் நிகழ்கால தொகுப்பாக உள்ளது.

தமிழக போலீசில் டி.ஜி.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வால்டர் ஐசக் தேவாரம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பதில் தீவிரம் காட்டியவர்.

ஓய்வு பெற்ற, 20 ஆண்டுகளுக்கு பின், சுயசரிதை எழுதியுள்ளார். கம்பீர தோற்றம், துப்பாக்கியின் கடுமை, மீசையின் மிடுக்கை தாண்டி, நெகிழ்ச்சி நிறைந்த கவிதையாக மலர்ந்துஉள்ளது.

இளமைக்காலம்


இளமைக்காலம் முதலே, ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்து நோக்கி படிப்படியாக உயர்ந்ததை வெளிப்படுத்துகிறது. அனுபவத்தை படம் பிடித்த இளமை, மென்மையுடன் மினுமினுக்குகிறது. படிப்பினைகளால் நிரம்பிஉள்ளது.

சிறுவனாக பார்த்ததை, 'ரக்பி விளையாட்டு வீரர் கோட்ஸ்பரி, குட்டிக்காரை ஓட்டிக்கொண்டு மூணாறில் செல்வார். அவரது உடல் கனத்தால், அந்த கார் ஒருபுறம் சாய்ந்தபடி ஓடும்...' என, சுவையுடன் சொல்கிறார்.

பள்ளி நினைவை, 'மூணாறு உயர்நிலைப் பள்ளிக்கு, 8 கி.மீ., நடந்து செல்வேன். துாரம் ஒரு பொருட்டேயில்லை.

வழிநெடுக குரைக்கும் மான்கள், ஓடி ஒளியும் காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, பறந்து காட்டுப் பூக்கள் மீது அமரும் பட்டாம்பூச்சி, வீட்டுக்கோழிகளை பிடித்து கொண்டோடும் நரி, பச்சைநிற பின்புலத்தில் கருப்பு புள்ளிமான்கள் என பார்த்துக்கொண்டே நடப்பேன்...' என குறிப்பிட்டுள்ளார்.

ராணுவத்தில் சேர முயன்றதை, 'ராணுவ பயிற்சி பள்ளியில் சேர, இந்தியாவின் வடகிழக்கு மாநில பகுதியில் தங்கியிருந்தேன். அப்போது ஐ.பி.எஸ்., தேர்வு முடிவும் வெளிவந்தது.

இந்திய அளவில், ஆர்.கே.ராகவனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்திருந்தேன். ராணுவ பயிற்சி பள்ளி முதல்வர் அறிவுரையால் போலீஸ் பணியில் சேர்ந்தேன். என் ஆலிவ்கிரீன் சீருடை கனவு, காக்கியாக மாறியது...' என்கிறார்.

போலீஸ் பணி நிகழ்வு ஒன்றை, 'குடியாத்தம் அருகே ஒரு கரடி மக்களை பயமுறுத்துவதாக புகார் வந்தது. அது இருந்த குகையை கண்டறிந்து, ஒரு கையில் துப்பாக்கி மற்றொரு கையில் டார்ச் விளக்குடன் ஊர்ந்தபடி நுழைந்தேன். வெளியே அதிகாரி பாலச்சந்திரன் துப்பாக்கியுடன் நின்றார்.

அவரிடம், 'உள்ளே சென்றதும் துப்பாக்கி சத்தம் கேட்ட பின் நான் வெளியே வந்தால் எல்லாம் நல்லபடியாக நடந்தது என்று பொருள். கரடி வெளியே வந்தால் சுட்டுக் கொல்லுங்கள்' என கூறியிருந்தேன். அதன்படி, ஒரே குண்டில் கரடியை கொன்றேன்...' என வியக்க வைத்துள்ளார்.

பணிக்காலம்


காவல் பணியில் வீர மரணமடைந்தோருக்கு குடும்ப ஒய்வூதியத்தில், ஒரு பெண் வாழ்நாளில், 97 வருடம், மூன்று மாதங்கள் பெற்ற தகவலை ஆவணமாக பதிவு செய்துள்ளார்.

சென்னை, சேத்துப்பட்டு ரயில் தண்டவாளம் அடியில் வெடிக்க இருந்த வெடிகுண்டை கையால் அகற்றியது இயல்பாக கூறப்பட்டுஉள்ளது.

பணிக்காலத்தில் துப்பாக்கியை பயன்படுத்தும் கட்டாயம் ஏற்பட்ட பின்னணியை தெளிவாக விளக்கியுள்ளார். முதல்வராக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் எடுத்த நடவடிக்கை, அது சார்ந்த பின்னணி தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை தடுத்ததை அப்போதைய முதல்வர் கருணாநிதி, 'சட்டத்தை மதிக்காமல் தவறான வழியில் சாராயம் காய்ச்சுவோர் திருந்துங்கள். திருந்தாவிட்டால் தேவாரம் வந்து திருவாசகம் படிப்பார்...' என நகைச்சுவையாக எச்சரித்த குறிப்பு உள்ளது.

கண்காணிப்பு பணியின் போது, இரவில் நின்று கொண்டே துாங்கும் போலீஸ்காரர் பற்றி நுட்பமாக அவதானித்து குறிப்பு எழுதிஉள்ளார்.

இதுபோல் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ஊன்றி கவனித்து வெளிப்படையாக மலர்ந்துள்ளது தேவாரத்தின் சுயசரிதை.

நேரடியாக மோத தயாரா?


சுயசரிதை இறுதி பகுதியில், 'சுயமரியாதையை காக்க எழுதிய கடிதம்' என்ற தலைப்பில் ஒரு செய்தி உள்ளது. கள்ளச்சாராய ஒழிப்பு கலால் பிரிவு துணைத் தலைவருடன் ஏற்பட்ட மோதல் பற்றிய அதன் விபரமாவது:சென்னை நகர ஆணையராக இருந்த போது, கலால் பிரிவு துணைத்தலைவர் ஒரு பரிந்துரை அனுப்பியிருந்தார். மேலும் சில தகவல்கள் வேண்டியிருந்ததால் அது நிறுத்தி வைக்கப்பட்டது.
மறுநாள் கலால் பிரிவு கூட்டத்தில், ' சாராய வியாபாரிகளை குண்டர் சட்டத்தில் அடைக்கும் ஆணையில் கையெழுத்திட, கமிஷனர் தேவாரம் பயப்படுகிறாரா...' என்று துணைத்தலைவர் கூறியதாக தகவல் கிடைத்தது. இதை ஊர்ஜிதம் செய்ததும், அவருக்கு அலுவலக ரீதியாக ஒரு கடிதம் எழுதினேன். அதில், 'நான் மனித குணங்கள் பல பெற்றுள்ளேன். அதில், பயம் என்பது என்னிடம் சிறிதும் இல்லை. கடவுளுக்கு மட்டுமே அஞ்சுவேன். அவரால் படைக்கப்பட்ட எதற்கும் அஞ்சுவதில்லை...
'ஒரு குற்றவாளிக்கு அஞ்சுகிறேன் என்று நீங்கள் கூறியதை பெரும் அவமரியாதையாக கருதுகிறேன். இதற்கு உடனடியாக பதில் தெரிய வேண்டும். இடத்தையும், நேரத்தையும் தேர்ந்தெடுத்து தெரிவியுங்கள். எந்தவித ஆயுதம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு நாட்களுக்குள் முடிவை சொல்லுங்கள். மோதிப்பார்க்கலாம்...' என்று குறிப்பிட்டு அனுப்பியுள்ளார். பின், நிபந்தனையற்ற மன்னிப்பால் பிரச்னை முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார் தேவாரம்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us