ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை சிறை காவலர்களிடம் விசாரணை
ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை சிறை காவலர்களிடம் விசாரணை
ADDED : செப் 27, 2024 02:05 AM
சென்னை:ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்தது தொடர்பாக, சிறைத்துறை காவலர்கள் இருவர், சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகினர்.
வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆயுள் தண்டனை கைதி சிவகுமார், 30; வீட்டு வேலை செய்யச் சொல்லி சித்ரவதை செய்யப்பட்டார். அவர் மீது, நகை, 4.25 லட்சம் ரூபாய் திருடியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பாக, சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமியால், 14 நாட்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டார். சம்பவம் நடந்த போது, வேலுார் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த, அப்துல் ரஹ்மான், பெண் போலீஸ் சரஸ்வதி உட்பட 14 பேர் சிவகுமாரை தாக்கி உள்ளனர்.
சிவகுமார் சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக, ராஜலட்சுமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிந்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள், வேலுார் மத்திய சிறை அதிகாரிகளிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில், சிறை காவலர்கள் ரசீத், மணி ஆகியோருக்கு, 'சம்மன்' அனுப்பினர்.
இருவரும், சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜராகினர். அவர்களிடம், 9 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடந்துள்ளது.
ஏற்கனவே, ஜெயிலர் அருள் முருகன், டி.ஐ.ஜி.,யின் பாதுகாவலர் ராஜு, சிறை காவலர்கள் பிரசாத், விஜி ஆகியோரிடமும் விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.