மொபைல் போன் செயலியில் மின்சார புகார் வசதி அறிமுகம்
மொபைல் போன் செயலியில் மின்சார புகார் வசதி அறிமுகம்
ADDED : பிப் 16, 2024 12:59 AM

சென்னை:மின் தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின் கட்டண வசூல் உள்ளிட்ட, மின்சாரம் தொடர்பான புகார்களை, மொபைல் போன் செயலியில் தெரிவிக்கும் வசதியை, மின் வாரியம் துவக்கியுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள, வாரிய தலைமை அலுவலகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் செயல்படுகிறது.
அங்கு, 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில் மின் தடை, கூடுதல் மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை, 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.
60 ஊழியர்கள் பணி
மின்னகத்தில் ஒரு ஷிப்டுக்கு, 60 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஒரே சமயத்தில் அதிகம் பேர் புகார் அளிக்க தொடர்பு கொள்ளும்போது, பலருக்கு இணைப்பு கிடைப்பதில்லை. இதனால், புகார் அளிக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மின் கட்டணத்தை, எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் செலுத்த, 'TANGEDCO' என்ற மொபைல் போன் செயலியை, மின் வாரியம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில், 'கம்ப்ளையின்ட்' என்ற பகுதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதில் மின் தடை, மீட்டர், மின் கட்டணம், மின்னழுத்த பிரச்னைகள் குறித்தும், சேதமடைந்த மின் கம்பம், மின் திருட்டு, தீ விபத்து, மின் கம்பி அறுந்து விழுந்திருப்பது ஆகியவை தொடர்பாகவும் புகார் அளிக்கும் சேவையை, வாரியம் துவக்கியுள்ளது.
அந்த செயலியில் மீட்டர், மின் கட்டண புகார்களுக்கு, மின் இணைப்பு எண் பதிவிட வேண்டும். மற்ற சேவைகளுக்கான புகாரை, மின் இணைப்பு எண் குறிப்பிடாமலும் பதிவிடலாம்.
நடவடிக்கை
அவ்வாறு பதிவிடும் போது, எந்த இடத்தில் இருந்து செயலியை இயக்குகிறோமோ, 'மேப்' வாயிலாக சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக முகவரி தானாகவே செயலியில் வந்து விடும். அதற்கு கீழ், இடத்தை குறிப்பிட்டு புகாரை பதிவிடலாம்.
மேலும், மொபைல் போன் கேமராவில் புகைப்படம் எடுத்தும் பதிவிடலாம். புகார் பதிவிடுவது தொடர்பான விபரம், செயலியிலும், கணினியிலும் பதிவாகிறது. இதை உயரதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
எனவே, மொபைல் செயலியில் பதிவிடப்படும் புகார் மீது, பொறியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுஉள்ளது.