ADDED : பிப் 18, 2026 05:58 AM

சென்னை: இரிடியம் எனப்படும் அரிதான தனிமத்தில் முதலீடு செய்தால், பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் எனக் கூறி, மர்ம கும்பல், தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த, 23க்கும் மேற்பட்டோரிடம், கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது.
இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து, இதுவரை, 20க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன், பீஹார், ஜார்க்கண்ட், தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த, ஆறு பேரை கைது செய்தனர். இவர்களின் கூட்டாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
பணம் முதலீடு செய்துள்ள நபர்களிடம், மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், தங்களை ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி பிரிவு அதிகாரிகள் என, அறிமுகமாகி உள்ளனர்.
முதலீட்டாளர்களை டில்லிக்கு வரவழைத்து, 'வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு, இரிடியம் விற்றதில், பல கோடி ரூபாய் வந்துள்ளது.
'அந்தத் தொகையை, உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்ப, ரிசர்வ் வங்கிக்கு பணம் செலுத்த வேண்டும்' என, மீண்டும் பல லட்சங்கள் பெற்று, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட, ஆறு பேரின் கூட்டாளிகள்தான், இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்கள், டில்லியில் பதுங்கி இருப்பதால், சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

