UPDATED : அக் 18, 2025 05:41 AM
ADDED : அக் 17, 2025 07:15 PM

நம் முன் நிகழும் அல்லது கேள்விப்படும் சம்பவங்கள் அனைத்தையும் அப்படியே கிரகித்துக் கொண்டு கடந்து போய்விட முடியாது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் கரூர் சம்பவம்.
நீதி விசாரணை நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், அங்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது என்று தெரியாத பட்சத்தில், ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி அரசியல் நடத்துவது அநாகரிகமானது என்பதை, முதல்வரே கூறியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
அதே நோக்கத்தோடுதான் யாரையும் குற்றம் சொல்லாமல், இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வு தொடராதிருக்க, முன்பு, இது போன்ற களங்களில் பணியாற்றிய காவல்துறை அதிகாரி என்ற முறையில் எனது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
தற்போது ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் கட்சியையும், சம்பவத்தை சந்தித்த அரசியல் எதிர்க்கட்சி மற்றும் அதிகாரிகளை மையமாக வைத்து இக்கட்டுரை எழுதப்படவில்லை.
ஒரு தனி மனிதனின் மனநிலை வேறு; அவனே ஒரு கூட்டத்தில் ஒருவனாகக் கலந்திருக்கும்போது அவனது மனநிலை வேறு.
ஒரு குறிப்பி ட்ட நோக்கத்திற்காக அதிக அளவில் கூடுகின்ற கூட்டங்களை, ஒன்றைப் பெறுவதற்காக கூடும் கூட்டம், ஒன்றைப் பார்ப்பதற்காகக் கூடும் கூட்டம், ஒன்றை எதிர்ப்பதற்காக கூடும் கூட்டம் என்று மூன்று வ கையாகப் பிரிக்கலாம்.
ஒன்றை பெறுவதற்காக கூடும் கூட்டம் இலவசமாக வினியோகிக்கப்படும், வேஷ்டி, புடவை, உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில், சாமி பிரசாதம் முதல் தீர்த்த நீர் வரை எதையும் வாங்குவதற்கு முண்டியடித்துப் போராடும் கூட்டம். இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.
இங்கு கூடும் கூட்டத்தினர் வறுமையின் காரணமாக கூடுவதாக உறுதியாக கூற இயலாது. இலவசமாக கிடைக்கும் ஒன்றைப் பெறும் ஆர்வம், இயற்கையாக மக்கள் மனதில் இருப்பதுதான் காரணம்.
எனவே, எதையுமே வினியோகிக்கத் துவங்குவதற்கு முன், கைவசம் இருக்கும் பொருள் அளவு, எதிர்பார்க்கப்படும் கூட்டம், இடவசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
குறைந்த அளவிலான பொருளை, அதிகமான கூட்டத்தில் வினியோகிக்க அவசரம் காட்டுவது மிகவும் ஆபத்தானது.
பெரும்பாலான கூட்ட நெரிசல் உயிரிழப்புகள், இது போன்ற வினியோகத்தில் தான் நிகழும். வினியோகிப்பவர், பொருள்களுடன் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்தபடி, ஒவ்வொருவருக்கும் தனியே வழங்கும் வகையிலும், கூட்டத்தை வரிசைப்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைத்தும் ஒழுங்குபடுத்தினால் மட்டுமே, இதுபோன்ற கூட்டங்களில், நெரிசல் அசம்பாவிதத்தைத் தடுக்க இயலும்.
ஒன்றை பார்ப்பதற்காக கூடும் கூட்டம் இறைவனை தரிசிக்க ஆலயத்தில் கூடுகிற கூட்டத்தை விட, மிகப் பிரபலமான திரைப்பட நடிகர்கள், கிரிக்கெட் போன்ற விளையாட்டு வீரர்களைப் பார்க்கக் கூடும் கூட்டம், மிகவும் தீவிரமாக செயல்படும். முன்பெல்லாம் ஆட்டோகிராப் வாங்க முயல்வர்; தற்போது செல்பி எடுக்க முயல்கின்றனர்.
ஒலிபரப்பி மூலம் அவ்வப்போது தகவல் கொடுத்து, கூட்டத்தினரை கட்டுக்குள் வைத்திருப்பதுடன், அனைவரும் பார்க்கும் வகையில், மேடை அல்லது நடைமேடை அமைத்து, முக்கிய பிரமுகரை உரிய பாதுகாப்புடன் நடந்து வரச் செய்யலாம்.
தற்போது, பெரும் அளவில் பயன்பாட்டில் உள்ள தொலைக்காட்சி திரைகளை அமைப்பதும், கூட்டத்தை கட்டுப்படுத்த உதவும்.
கட்சிகள் நடத்தும் பேரணி, மாநாடு போன்றவை இந்த வகையைத்தான் சேரும்.
கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் போட்டி போட்டு, தலைவரின் நன்மதிப்பைப் பெற, தங்கள் பகுதி மக்களைத் திரட்டி அதிக அளவில் கூட்டத்தைக் காட்ட முயற்சிப்பர்.
ஒன்றை எதிர்ப்பதற்காக கூடும் கூட்டம் சமாளிக்க இயலாத, மிகவும் ச வாலான கூட்டம், எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூடும் போராட்டக்காரர்கள் கூட்டம். எதையாவது செய்து அரசு மற்றும் சாதாரண மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அரசுக்கு எதிராக திருப்பவும் வேண்டும் என்பதற்காக, அசாதாரணமாக நடந்து கொள்வர்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முயல்வர்; ஒருவர் செயலை அடுத்தவர் மிஞ்ச முற்படுவர். அதைத் தடுப்பதற்காக, போலீசார் எடுக்கும் சாதாரண நடவடிக்கையைக் கூட பெரிதுபடுத்தி, பிரச்னை செய்வர். நடக்காததை நடந்ததாகக் கூறி, 'போலீஸ் அராஜகம்' என்று குரல் கொடுப்பர்.
ஆனால் இது, ஆளும் அரசுக்கு எதிரானது என்பதால், இதைக் கட்டுக்குள் கொண்டுவர முயலும் காவலர்களும், அதிகாரிகளும், அரசின் நன்மதிப்பைப் பெறவும், தங்கள் பகுதியில் அசம்பாவிதம் நடந்து தங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், போராட்டக்காரர்கள் மீது கூடியவரை கடுமையாக செயல்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்து விடுவர்.
எதிர்ப்பாளர்களின் அத்துமீறலும், அரசின் ஆதரவுமே அவர்களுக்கு அந்த துணிவைக்கொடுக்கிறது.
ஆளும்கட்சிக்கு எதிரணியிலிருக்கும் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்யும் பேரணி, மாநாடு போன்றவற்றிற்கு அனுமதி கொடுப்பதில் ஆரம்பித்து, பாதுகாப்பு அலுவல் வரை, காவல்துறையினர், கடமையே என்று செய்ய வேண்டியதை செய்தாலும், அவற்றில் சற்று தயக்கமும், ஆர்வமின்மையும் கலந்திருக்கும்.
அதற்கு காரணம், அதில் அதிக ஆர்வம் காட்டி சிறப்பாக செயல்பட்டால், ஆளும் கட்சியினரின் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும்.
அது சில சமயங்களில் எல்லை மீறிப்போனால், உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இடமாற்றம் துவங்கி, அந்த கட்சியின் ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்பட்டு, பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டிய ஆபத்தும் இருக்கிறது. இதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல.
ஆளும் கட்சியின் இந்த எதிர்பார்ப்பும், அதிகாரிகளின் இந்த மனப்பாங்கும், சூழ்நிலை காரணமாக இயற்கையாக உருப்பெற்றவை.
என் அனுபவம் இது நான் நாகப்பட்டினம் நகர உதவி ஆய்வாளராக இருந்த போது, ஆளும்கட்சிக்கு எதிரணியில் இருந்த நடிகர் சிவாஜி கணேசன், தன் கட்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
கூட்ட முடிவில் அவர், மேடையை விட்டு இறங்கியபோது, எனக்கு மிகவும் பழக்கமான உள்ளூர் பிரமுகரும், நடிகர் திலகத்தின் உறவினருமான ஒருவர், நடிகர் திலகத்திடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
அவ்வளவுதான்... ஒரு நொடியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை, மறுநாள் மாவட்ட கண்காணிப்பாளரிடம் ஒருவர் ரகசிய தகவல் மற்றும் புகாராக கொண்டு செல்லவே, மாவட்ட கண்காணிப்பாளர், அனுபவமிக்க பண்பான அதிகாரி என்பதால், கண்டுகொள்ளாமல் விட்டார். அப்போதிருந்த துணை கண் காணிப்பாளர் மூலமாக, எனக்கு இது தெரியவந்தது.
ஆளும்கட்சி நடத்தும் மாநாடு மற்றும் முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், உயர்மட்ட அதிகாரிகளின் மேற்பார்வை, அறிவுரை ஆலோசனை, ஒத்துழைப்பு, ஆதரவு ஆகியவை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு அதிகாரியும், தானே நேரில் வந்து பார்வையிட்டு, ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறையுடன் செயல்படுவார்; உரிய ஆலோசனை வழங்குவார். ஆனால், எதிர்க்கட்சியினரின் நிகழ்ச்சிகள் மீது, அத்தனை அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்.
எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இது தான் நடக்கும். இதில் சில அதிகாரிகள் விதிவிலக்காய் இருந்தாலும், உள்ளூர் தலைவர்கள் காவல்துறை மீது நம்பிக்கை வைத்து நட்புடன் இருந்தாலும், அந்தப் பகுதியில் இந்த தவறு நடப்பதற்கு வாய்ப்பு சற்று குறைவு.
இப்படி செயல்படுங்களேன்! நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு வரும் கட்சித் தலைவர்களிடம், நிபந்தனை விதிப்பதில், ஆளும்கட்சிக்கு காட்டும் பரிவும், எதிர்க்கட்சியிடம் காட்டும் கடுமையும், சில அதிகாரிகளின் அணுகுமுறையில், சற்று வெளிப்படையாகவே தெரியும்.
இதில் விதிவிலக்காக சில நேர்மையான திறமையான அனுபவமிக்க அதிகாரிகள் மட்டுமே, எந்த நிகழ்ச்சியில் அசம்பாவிதம் நடந்தாலும், நாம் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது என்பதை உணர்ந்தவர்களாக இருப்பர். அவர்களின் அணுகுமுறை, முறையானதாக இருக்கும்.
எந்த கட்சியின் நிகழ்ச்சியாக இருந்தாலும், கூடுவது பொதுமக்கள் தான். அரசையும், அதிகாரிகளையும் தான் முழுமையாக அவர்கள் நம்பி இருக்கின்றனர்.
அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகள், எல்லா நிகழ்வுகளையும் ஒன்றாகவே பாவிக்க வேண்டும்; ஆனால் நடைமுறை அப்படியில்லை. இது, அவர்களையும் அறியாமல், அவர்களிடம் பற்றிக் கொண்டு விட்ட கலாசாரம்.
நிகழ்ச்சிக்கு அனுமதியும் பாதுகாப்பும் கோரி வரும் பொறுப்பாளர்களுடன், போதுமான நேரத்தை செலவிட்டு, நிகழ்ச்சிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை, அவர்களின் வச திக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், மழை - வெயில் போன்றவற்றிலிருந்து அளிக்கப்படும் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஆகிய வை பற்றி கேட்டறிந்து, உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கும் கூட்டங்களில், குழந்தைகள், வயதானவர்களை அழைத்து வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளலாம். அதை ஒரு நிபந்தனையாகவே அனுமதிக் கடிதத்தில் குறிப்பிடலாம்.
வரும் கூட்டத்தின் அளவு பற்றிய தகவலுக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மட்டுமே நம்பியிராமல், காவல்துறை உளவுப்பிரிவு மூலம் சேகரிக்கும் தகவலே, நம்பத் தகுந்ததாக இருக்கும். மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் மக்களுக்கும், அந்தந்த பகுதியைச் சேர்ந்த செயலாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்தால், கூட்டத்தினரிடையே ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வரமுடியும்.
அசம்பாவிதம் நிகழ்ந்தால், போட்டி போட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு கோடிகளில் கொட்டிக் கொடுப்பதைத் தவிர்க்க, நிகழ்ச்சிக்கு தேவையான முக்கிய செலவுகளில், தாராளம் காட்டினால் போதும்.
மக்களும் சுதாரிக்க வேண்டும் மக்களின் ஆர்வமும், ஆசையும் கூட, காரணத்தோடு கூடியதாகவும், ஒரு வரம்புக்குள் அடங்கியதாக இருக்கும் வரை, ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. காரணமில்லாத, வரம்பு மீறிய ஆர்வமும், ஆசையும், ஆபத்தை விளைவிக்கத்தான் செய்யும்.
செய்த தவறுக்கு பலமடங்கு அதிகமான இழப்பைச் சந்தித்தவர்களின் தவறைச் சுட்டிக்காட்டுவது, நம் நோக்கமல்ல; ஆனால், இதே மாதிரியான தவறும், இழப்பும் மறுபடியும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற சமூக அக்கறையே காரணம்!
- எம்.கருணாநிதி- காவல்துறை கண்காணிப்பாளர்- - ஓய்வு