ADDED : அக் 17, 2025 07:10 PM
சென்னை:தீபாவளியை ஒட்டி, மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்த, 'ட்ரை ப்ரூட்ஸ்' லட்டு, உலர் திராட்சை, முந்திரி உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்கள் அடங்கிய, 'மதி தீபாவளி பரிசு' பெட்டகம் விற்பனை துவங்கி உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்புகளை, மாநிலம் முழுதும் விற்பனை செய்ய, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் தீபாவளியை ஒட்டி, 'ட்ரை ப்ரூட்ஸ்' லட்டு, உலர் திராட்சை, முந்திரி, வேட்டி, சேலை, மூங்கில் நார் கூடைகள் அடங்கிய, மதி தீபாவளி பரிசு பெட்டக விற்பனை துவங்கி உள்ளது.
மேலும், கற்சிற்பங்கள், சுடுமண் ஆபரணங்கள், செக்கு எண்ணெய், மசாலா பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவையும் விற்பனைக்கு வந்துள்ளன. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பரிசு பெட்டகம் பொருட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வரும், 20ம் தேதி வரை விற்பனை நடக்கும்,
பரிசு பெட்டகம், 500 முதல் 2,500 ரூபாய் வரை கிடைக்கிறது. சென்னையில், நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்திலும், மாவட்டங்களில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் பூ மாலை வணிக வளாகங்களிலும், பரிசு பெட்டகங்களை வாங்கலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.