ஓசூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுக்க அனுமதி கேட்பு
ஓசூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுக்க அனுமதி கேட்பு
ADDED : அக் 17, 2025 07:17 PM
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைய உள்ள, ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு நிலம் எடுக்கும் பணிக்கு, தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முக்கிய தொழில் மையமாக, கிருஷ்ணகிரி உருவெடுத்துள்ளது. இது, கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு அருகே உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி செல்லும் முதலீட்டாளர்கள், பெங்களூருக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக செல்கின்றனர்.
இதனால், பயண நேரம் அதிகமாகிறது. எனவே, கிருஷ்ணகிரியில், 2,000 ஏக்கரில், ஓசூர் விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, கிருஷ்ணகிரி - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சூளகிரி தாலுகாவில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு, சர்வதேச தரத்தில் சரக்கு முனையம், விமான பழுதுபார்ப்பு, ஒருங்கிணைப்பு மையம் உள்ளிட்ட வசதிகளுடன் பிரமாண்ட விமான நிலையம் கட்டப்பட உள்ளது.
எனவே, நிலம் கையகப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, 'டிட்கோ' எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதற்கு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.