குரங்குகளுக்கு பொங்கல் கொடுப்பது சரியா? வழக்கு தொடர்ந்தவரிடம் கோர்ட் கேள்வி
குரங்குகளுக்கு பொங்கல் கொடுப்பது சரியா? வழக்கு தொடர்ந்தவரிடம் கோர்ட் கேள்வி
ADDED : ஆக 31, 2025 06:38 AM
சென்னை: 'இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய குரங்குகளுக்கு, பொங்கல், வடை என உணவளிப்பது சரியா' என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், சோளிங்கர் கோவிலில் உள்ள குரங்களை, வனத்துறை பிடிக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை கோரிய மனுவுக்கு, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
பழமையானவை ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்த, ஸ்ரீ கடிகாசல மாருதி டிரஸ்ட் நிறுவன அறங்காவலர் ராஜா சுவாமி தாக்கல் செய்த மனு:
சோளிங்கரில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலும், ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலும் மிகவும் பழமையானவை.
ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ள மலைக்குன்று மற்றும் கோவில் வளாகம் முழுதும் ஏராளமான குரங்குகள் உள்ளன. பாரம்பரியமாக அனுமனின் புனித வெளிப்பாடாக, இந்த குரங்குகள் பக்தர்களால் வழிபடப்படுகின்றன.
இங்குள்ள குரங்குகள், பக்தர்களை இதுவரை துன்புறுத்தியதாக எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. கோவில் பணிகளுக்கும் இடையூறாக இருந்ததில்லை.
ஸ்ரீ கடிகாசல மாருதி டிரஸ்ட், 2018ம் ஆண்டு முதல் பக்தர்களின் உதவிகளை பெற்று, குரங்குகளுக்கு உணவு, குடிநீர் வழங்குவது, அவற்றை பராமரிப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், கோவில் வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை, ஆக., 12ம் தேதி, மாவட்ட வனத்துறை திடீரென பிடித்து, அங்கிருந்து அகற்றி உள்ளது.
சட்டவிரோதம் குரங்குகளை அகற்றும் வனத்துறையின் திடீர் முடிவு குறித்து, மாவட்ட கலெக்டர், கோவில் செயல் அதிகாரி, அறங்காவலர் ஆகியோருக்கு தெரிவிக்கவில்லை.
முன்னறிவிப்பின்றி வனத்துறை மேற்கொண்ட நடவடிக்கை சட்ட விரோதமானது. இது, பக்தர்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தியுள்ளது.
எனவே, கோவில் வளாகத்தில் இருந்து குரங்குகளை பிடித்து அகற்ற, வனத்துறைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், 'குரங்குகளை பிடிக்கும், வனத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'இயற்கையோடு இணைந்து வாழ்பவை குரங்குகள். அவற்றுக்கு நீங்கள் பொங்கல், வடை என அளிப்பது சரியா' என, மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், 'பொங்கல், வடை போன்றவற்றை உண்டு பழகியவை, பக்தர்கள், மனிதர்கள் கையில் வைத்திருக்கும் உணவுகளை தான் பறித்து செல்லும்' என, தெரிவித்த நீதிபதி, இந்த மனுவுக்கு ஹிந்து அறநிலைய துறை கமிஷனர், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்., 18க்கு தள்ளி வைத்தார்.

