எம்.எஸ்.எம்.இ., வரையறை மாற்றத்தால் பலனா, பாதிப்பா? குறு நிறுவனங்களிடையே குழப்பம்
எம்.எஸ்.எம்.இ., வரையறை மாற்றத்தால் பலனா, பாதிப்பா? குறு நிறுவனங்களிடையே குழப்பம்
UPDATED : ஏப் 01, 2025 06:27 AM
ADDED : ஏப் 01, 2025 06:25 AM

கோவை: எம்.எஸ்.எம்.இ.,க்கான வரையறை மாற்றப்பட்டிருப்பது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம் தொழில்துறையினருக்கு குறிப்பாக, குறுந்தொழில் முனைவோரைப் பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறையை மாற்ற வேண்டும் என, தொழில் அமைப்புகள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இதை ஏற்று பட்ஜெட்டில், எம்.எஸ்.எம்.இ., வரையறையை மாற்றி, முதலீட்டு வரம்பை 2.5 மடங்கும், விற்றுமுதல் (டர்ன் ஓவர்) 2 மடங்கும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்து.
இதன்படி, ரூ.1 கோடி வரை இருந்த குறு நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.2.5 கோடியாகவும், விற்று முதல் ரூ.10 கோடியாகவும் உயர்த்தப்பட்டது. சிறு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு ரூ.25 கோடியாகவும், விற்று முதல் ரூ.100 கோடியாகவும்; நடுத்தர நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு ரூ.125 கோடியாகவும், விற்று முதல் ரூ.500 கோடியாகவும் மாற்றியமைக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு, நிதியாண்டின் முதல்நாளான, இன்று முதல் அமலுக்கு வருகிறது. குறுந்தொழில்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. அப்போதுதான் அறிவிக்கப்படும் சலுகைகள் குறுந்தொழில்களுக்கு முழுமையாக சென்றடையும் என்பது, குறுந்தொழில் முனைவோரின் வாதம்.
இந்நிலையில், எம்.எஸ்.எம்.இ., வரையறை மாற்றத்தால், புதிதாக இணையும் நடுத்தர நிறுவனங்களும், சிறு நிறுவனங்களும், தங்களுக்கான கடன் உள்ளிட்ட சலுகைகளை பறித்துக் கொள்ளக்கூடும் என்ற அச்சம், குறு நிறுவனங்களிடையே எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, குறுந்தொழில் முனைவோர் கூறியதாவது:
டர்ன் ஓவர் அதிகரிக்கப்பட்டிருப்பதால், சில பெரு நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவும், நடுத்தர நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் என்ற வரையறைக்குள்ளும் வந்துவிடும். இதனால், மைக்ரோ (குறு) நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய கடன், உட்பட பல்வேறு சலுகைகளையும் அவர்கள் பறித்துக் கொள்ளக் கூடும். இவ்விவகாரத்தை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, குறு நிறுவனங்களின் அச்சத்தைக் களைய வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.