சிறுபான்மை ஓட்டு வங்கியில் ஓட்டை தடுக்க முயற்சிக்கும் தி.மு.க., அரசு?
சிறுபான்மை ஓட்டு வங்கியில் ஓட்டை தடுக்க முயற்சிக்கும் தி.மு.க., அரசு?
UPDATED : செப் 25, 2025 03:06 AM
ADDED : செப் 25, 2025 02:53 AM

சென்னை: நடிகர் விஜய் துவங்கியுள்ள த.வெ.க., வருகையால், சிறுபான்மையினர் ஓட்டு வங்கியில் ஓட்டை விழும் என்பதால், அதை சரிகட்டுவதற்கான முயற்சிகளை தி.மு.க., தலைமை கையில் எடுத்துள்ளது.
தமிழகத்தில் இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஓட்டுகள், 13 சதவீதம் உள்ளன. தி.மு.க., கூட்டணிக்கு, இந்த ஓட்டுகள் கிடைத்து வருகின்றன.
இதன் காரணமாக, கடந்த 2021 சட்டசபை, 2024 லோக்சபா தேர்தல்களில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது.
வரும் 2026 சட்டசபை தேர்தலிலும், சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை தக்கவைக்க, தி.மு.க., தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள், தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மட்டுமின்றி, தி.மு.க., சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதற்கிடையே, விஜய் கட்சி வரவால், சிறுபான்மையினர் ஓட்டுகள், தி.மு.க.,விற்கு மொத்தமாக கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என தெரிய வந்துள்ளது.
பல்வேறு சர்ச்சுகளில், இப்போதே விஜய்க்கு ஆதரவான பிரசார குரல் ஒலிக்கிறது. இது, தி.மு.க., தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிறுபான்மையினர் நல ஆணையம் வாயிலாக கிறிஸ்துவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அந்த சலுகைகள், தகுதி வாய்ந்த மக்களை சென்றடையவில்லை என தெரிகிறது. சிறுபான்மை நல ஆணையத்தில் உள்ளவர்கள், இதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.
இதனால், சிறுபான்மையின மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், விஜய் கட்சிக்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிகளவில் செல்லும் என தெரிகிறது.
இதனால், உஷாரான தி.மு.க., அரசு, சிறுபான்மையினர் நல ஆணைய திட்டங்கள், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் தலைமையில் சிறப்பு குழு அமைத்துள்ளது.
இதில், தமிழ்நாடு வக்ப் வாரிய உறுப்பினர் சுபேர்கானுக்கும் இடம் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, திசைமாறும் சிறுபான்மை ஓட்டுகளை தக்கவைக்க முடியும் என, தி.மு.க., கணக்கு போடுகிறது.