அடுத்தடுத்து சமூக ஆர்வலர்கள் படுகொலை; சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? சீமான் கேள்வி
அடுத்தடுத்து சமூக ஆர்வலர்கள் படுகொலை; சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? சீமான் கேள்வி
ADDED : பிப் 15, 2025 02:45 PM

சென்னை: 'அடுத்தடுத்து சமூக ஆர்வலர்கள் படுகொலைகள் செய்யப்படும் பேரவலம். சமூக விரோதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் கள்ளத்தனமாகச் சாராயம் விற்றதைத் தட்டி கேட்ட ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி என்ற இளைஞர்களை ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் என்ற 3 கள்ளச்சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் பெருகி ஓடும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்தாத, திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் ஆட்சியாளர்கள் இழைக்கும் அநீதிக்கு எதிராகவும், நாளும் நிகழ்ந்தேறும் சமூக அவலங்களுக்கு எதிராகவும் கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகிவிட்டது. நான்கு ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனையிலும், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கத்திலும், டாஸ்மாக் மது விற்பனையிலும்தான் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறி நிற்கிறது.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை நடைபெறாத நாட்களே இல்லை என்ற அளவிற்குப் பள்ளிக் குழந்தைகள், பெண்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசுப்பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என யாருக்கும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வி எழும் அளவிற்கு தி.மு.க., ஆட்சியில் தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டது தான் பேரவலம்.
அரசிற்கு அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்று போலீசார் நினைத்தால் குற்றத்தைத் தடுக்க முனைய வேண்டுமே தவிர, குற்றம் நடைபெற்றதற்கான காரணத்தை மறைக்க முயலக் கூடாது.
தி.மு.க., ஆட்சியில் கட்டுக்கடங்காத கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்த போலீசாரை தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், இனியாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். தி.மு.க., அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் படுகொலை செய்யப்பட்டுள்ள ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 50 லட்சம் ரூபாய் நிதியும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.