புயல் பாதித்த பகுதிகளில் வயிற்றுப் போக்கு பாதிப்பு? கண்காணிக்க உத்தரவு
புயல் பாதித்த பகுதிகளில் வயிற்றுப் போக்கு பாதிப்பு? கண்காணிக்க உத்தரவு
ADDED : டிச 03, 2025 06:52 AM

சென்னை: 'தமிழகத்தில், புயல் பாதித்த பகுதிகளில், காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பரவுகிறதா என்பதை, கண்காணிக்க வேண்டும்' என, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன் இயக்குநர் சோமசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாநிலத்தில் உள்ள அனைத்து மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களிலும், 24 மணி நேரமும், டாக்டர்கள் பணியில் இருத்தல் அவசியம். ஆரம்ப சுகாதார நிலையங்களை பொருத்தவரை, செவிலியர்கள் தொடர்ந்து பணியில் இருத்தல் வேண்டும். மாலை, 4:00 மணி முதல் காலை 9:00 மணி வரை, தேவை அடிப்படையில் டாக்டர்களை பணிக்கு வருமாறு அழைக்கலாம்.
அதேபோல், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள், மருத்துவ உதவியாளர்கள், போதிய எண்ணிக்கையில் இருத்தல் வேண்டும். சுகாதார நிலையங்களில், தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகள், வலுவற்ற மேற்கூரைகள், சாயும் நிலையில் மரங்கள் இருந்தால், அவற்றை சரி செய்ய வேண்டும்.
மழைநீர் வடிகால் வசதிகள், மாற்று மின் இணைப்பு வசதிகள், உரிய மின் விளக்கு வசதிகள் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும். ஜெனரேட்டர் சாதனங்களை, பழுதின்றி பராமரித்தல் வேண்டும்.
குடிநீரில் கழிவுநீர் கலக்கிறதா என்பதை ஆய்வு செய்வதும், போதிய அளவு குளோரின் கலந்து குடிநீர் வினியோகிக்கப்படுவதை உறுதி செய்வதும் முக்கியம்.
வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், உள்நோயாளிகளையும், பேறு காலம் நெருங்கும் கர்ப்பிணியரையும், உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்.
காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்புகள் பரவுகிறதா என்பதை, கண்காணித்தல் அவசியம். ஓரிடத்தில் மூன்று பேருக்கும் அதிகமானோருக்கு,காய்ச்சல் கண்டறியப்பட்டால், அங்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

