'விநாயகர் சிலைகளுக்கு இப்போதே நிபந்தனையா?': ஹிந்து முன்னணி கண்டனம்
'விநாயகர் சிலைகளுக்கு இப்போதே நிபந்தனையா?': ஹிந்து முன்னணி கண்டனம்
UPDATED : ஜூலை 04, 2025 07:15 AM
ADDED : ஜூலை 04, 2025 05:12 AM

திருப்பூர்: 'தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை திசை திருப்ப, ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வாதம் முயற்சி செய்கிறார்' என ஹிந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வாதம் வெளியிட்ட அறிவிப்பில், விநாயகர் சதுர்த்தி விழாவில் புதிய சிலைகள் வைக்கக்கூடாது என கூறப்பட்டு உள்ளது.
மக்கள் மீது காவல் துறையினர் காட்டும் வன்முறை என்பது, திராவிட மாடல் அரசு நிர்வாகத்தின் படுதோல்வி. அதற்கான ஆலோசனை கூட்டத்தில், சம்பந்தமே இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா நிபந்தனையை சேர்த்து அறிவித்தது, பிரச்னையை மூடி மறைத்து, திசை திருப்ப நடக்கும் முயற்சி.
தி.மு.க., கூட்டணி கட்சியினர், ஹிந்துக்களுக்கு எதிராக தினந்தோறும் ஏதாவது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றனர்.
அவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி, தி.மு.க., அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால், ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கக்கூட அனுமதி மறுப்பதோடு, சம்பந்தமே இல்லாத நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
ஆர்ப்பாட்டம் முதல், முருக பக்தர்கள் மாநாடு வரை நீதிமன்றத்தை நாடியே அனுமதி பெற வேண்டியுள்ளது. எந்தவித வேறுபாடின்றி, தமிழக ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது விநாயகர் சதுர்த்தி விழா. அதற்கு, இப்போதே நிபந்தனைகள் விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வருவதை திசை திருப்ப, ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வாதம் இதுபோல் அறிவித்தது கண்டிக்கத்தக்கது. யார் தடுத்தாலும், விநாயகர் சதுர்த்தி திருவிழா, மக்கள் ஒற்றுமை விழாவாக வழக்கம்போல நடக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.