சனாதனத்திலிருந்து பா.ம.க.,வை விடுவிக்கும் முயற்சியா: ரவிக்குமார் கேள்வி
சனாதனத்திலிருந்து பா.ம.க.,வை விடுவிக்கும் முயற்சியா: ரவிக்குமார் கேள்வி
ADDED : ஏப் 11, 2025 12:25 AM
சென்னை:'பா.ம.க., தலைவர் பொறுப்பை, தானே எடுத்து கொள்வதாக, ராமதாஸ் தெரிவித்து இருப்பது, சனாதன ஆதிக்கத்தில் இருந்து, அக்கட்சியை விடுவிக்கும் முயற்சியா' என, வி.சி., - எம்.பி., ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், சமீபத்தில் அவரது அனுபவங்களை பகிர்ந்திருந்தார். அவருக்கு நண்பர்களாக இருந்தவர்கள், உதவியவர்கள் பலர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என, தெரிவித்திருந்தார். அவை வட மாவட்டங்களில் நிலவிய, சமூக நல்லிணக்க சூழலை எடுத்து காட்டியது. கடந்த 1980ல், அவரை நான் சந்தித்தேன்.
அப்போது, அவரிடம் வெளிப்பட்ட சமூகநீதி, சமூக நல்லிணக்கம் குறித்த கருத்துக்கள், அவற்றின் மீது, அவர் காட்டிய உறுதியை நினைத்து பார்க்கிறேன். அதன்பின், தேர்தல் அரசியல், அவரை எங்கெங்கோ இழுத்து சென்று விட்டது. கடந்த, 1989ல், பா.ம.க.,வை ராமதாஸ் உருவாக்கவில்லை என்றால், வன்னியர் சமூகத்தினர், அப்போதே ஹிந்துத்துவ அரசியலுக்கு பலியாகி இருப்பர். அதை தடுத்து நிறுத்தியதில், அவரது பங்கு முக்கியமானது.
அப்படி செய்த அவரே, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது, மிகப் பெரிய அரசியல் முரண். அதுமட்டுமல்ல கருத்தியல் பிழையும் கூட. அந்த அரசியல் சாய்வே, வட மாவட்டங்களில் நிலவிய சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தது. இன்று பா.ம.க.,வின் தலைவர் பொறுப்பை தானே எடுத்துக் கொள்வதாக, அவர் அறிவித்திருக்கிறார். இது சனாதன ஆதிக்கத்தில் இருந்து, பா.ம.க.,வை விடுவிப்பதற்கான முயற்சியா அல்லது முழுமையாக ஒப்படைப்பதற்கான நடவடிக்கையா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

