sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழனிசாமி டில்லி செல்ல விஜய் காரணமா? 'செக்' வைக்க பா.ஜ., திட்டம்

/

பழனிசாமி டில்லி செல்ல விஜய் காரணமா? 'செக்' வைக்க பா.ஜ., திட்டம்

பழனிசாமி டில்லி செல்ல விஜய் காரணமா? 'செக்' வைக்க பா.ஜ., திட்டம்

பழனிசாமி டில்லி செல்ல விஜய் காரணமா? 'செக்' வைக்க பா.ஜ., திட்டம்

34


UPDATED : மார் 30, 2025 10:50 AM

ADDED : மார் 29, 2025 11:41 PM

Google News

UPDATED : மார் 30, 2025 10:50 AM ADDED : மார் 29, 2025 11:41 PM

34


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கான பேச்சு நடக்கிறது; சரியான நேரத்தில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில், முன்னதாக அமித் ஷாவை சந்தித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பலே ஆட்டம் குறித்த தகவல் அம்பலமாகி உள்ளது.

இதனால், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வுக்கு, 'செக்' வைத்து, அக்கட்சியை வழிக்கு கொண்டு வரும் வேலையில் பா.ஜ., தரப்பும் களம் இறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாகவே, திடீரென டில்லி வந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன், அமித் ஷா ரகசிய சந்திப்பு நடத்தியதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021 சட்டசபை தேர்தலின் தோல்விக்கு காரணம், சிறுபான்மையினர் ஆதரவு கிடைக்காதது தான் என்று, அ.தி.மு.க.,வில் ஒரு தரப்பினர் கூறினர். அதை ஏற்ற பழனிசாமி, பா.ஜ.,வை விலக்கி வைத்தால், சிறுபான்மையினர் தன் பக்கம் வருவர் என்ற நம்பிக்கையில், லோக்சபா தேர்தலுக்கு, வேறு கூட்டணியை கட்டமைக்க முயன்றார்.

நெருக்கடி




ஆனால், அவர் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. அ.தி.மு.க., பக்கம் இருந்த பா.ம.க.,வையும், பா.ஜ., இழுத்துக் கொண்டது. தே.மு.தி.க., மட்டுமே அ.தி.மு.க.,வோடு நின்றது. தி.மு.க., கூட்டணி, 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

பா.ஜ.,வுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால், அ.தி.மு.க., 25, பா.ஜ., நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என, ஓட்டு கணக்கின் அடிப்படையில் பேசப்பட்டது.

இந்த நேரத்தில், நடிகர் விஜய் அரசியல் களத்துக்கு வந்தார். விக்கிரவாண்டியில் பிரமாண்ட கூட்டத்தை திரட்டினார். கூட்டணியில் விஜயை சேர்த்தால், சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி, மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்று, பழனிசாமி கணக்கு போட்டார்.

அவருடைய நம்பிக்கைக்குரிய துாதர்கள் விஜயுடன் பேச்சு நடத்தினர். தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தான் எதிரிகள் என, பிரகடனம் செய்திருந்த விஜய்க்கு, அ.தி.மு.க.,வுடன் சேருவதில் தடங்கல் இல்லை. ஆனால், மற்ற கட்சிகள் போல பத்தோடு பதினொன்றாக வர முடியாது என்றார்.

தமிழக வெற்றி கழகத்துக்கு, 100 தொகுதிகள் வேண்டும்; கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்; துணை முதல்வர் பதவி, ஒன்பது அமைச்சர் பதவி வேண்டும்; அதில், உள்துறை முக்கியம் என்ற நிபந்தனைகளுடன், தேர்தல் செலவுக்கு கணிசமான நிதியும் கேட்டதாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் சொன்னார்.

தொடர்ந்து சில சுற்றுகள் பேசியும் விஜய் நிலைப்பாடு மாறாததால், பழனிசாமியால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

இதேநேரத்தில், அ.தி.மு.க.,வுடன் உறவை புதுப்பிக்க பா.ஜ.,வும் காய் நகர்த்த துவங்கியது. இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல், பொதுச்செயலர் பதவிக்கு எதிரான வழக்கு என பழனிசாமிக்கு நேர்ந்த நெருக்கடிகள், அவரை வழிக்கு கொண்டு வர பா.ஜ., முன்னெடுத்த நகர்வுகள் என்று நம்பப்படுகிறது.

டில்லிக்கு வந்தால் பிரச்னைகளை பேசி தீர்க்கலாம் என்றும், அவருக்கு சேதி சொல்லப்பட்டது.

இனி, எக்காலத்திலும் பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லி வந்த பழனிசாமி, இந்த அழைப்பை வேறு வழியில் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்கின்றனர், அவருக்கு நெருக்கமானவர்கள்.

மத்திய அரசிலும், ஆளும் கட்சியிலும், அ.தி.மு.க.,வுக்கு இருக்கும் டிமாண்டை விஜய்க்கு உணர்த்தினால், நிபந்தனைகளில் அவர் இறங்கி வருவார் என்று கணக்கு போட்டாராம்.

ரகசிய சந்திப்பு




இரண்டு அரசுகளின் நெருக்கடியையும் அனுபவிப்பதை விட, மீண்டும் பா.ஜ.,வுடன் கைகோர்த்து விடலாம் என நச்சரிக்கும் நெருக்கமான தளபதிகளையும், அடுத்த விமானத்தில் டில்லிக்கு வர சொன்னது பழனிசாமியின் இன்னொரு உத்தி.

அமித் ஷா சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு, பழனிசாமி பிடி கொடுக்காமல் பதில் அளித்துள்ளார். சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசியபோது, தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக மட்டுமே அமித் ஷாவை சந்தித்ததாக சொன்னார்.

விஜயுடன் பேரம் பேசும் வாய்ப்புக்காகவே, டில்லி பயணத்தை பயன்படுத்தி இருக்கிறார் என்பது பின்னர் தெரியவந்ததும், கோபமான அமித் ஷா, மாற்றுத் திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

கட்சியில் மிகவும் சீனியரும், எந்த சர்ச்சையிலும் சிக்காதவருமான செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதால், அவரை முன்னிறுத்தி திட்டத்தை செயல்படுத்த துவங்கி இருப்பதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் இருந்து டில்லி செல்லாமல், மதுரை வழியாக சுற்றி போன செங்கோட்டையன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ரகசியமாக சந்தித்து விட்டு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து, செங்கோட்டையன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அ.தி.மு.க.,வுக்கு உள்ளேயும் வெளியிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.

- நமது நிருபர் -

(அதிமுக.,வுடன் கூட்டணிக்காக பேச்சு நடப்பதாகவும், அறிவிப்பும் என்றும் அமித்ஷா கூறியது பற்றி நமது 'தினமலர்' நாளிதழின் மற்றொரு பேனரில் செய்தி வெளியாகியுள்ளது. அவற்றை விரிவாக படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்)








      Dinamalar
      Follow us