இரிடியம் விற்பனையில் லாபம் எனக்கூறி ஐ.டி., ஊழியரிடம் ரூ.1.87 கோடி மோசடி
இரிடியம் விற்பனையில் லாபம் எனக்கூறி ஐ.டி., ஊழியரிடம் ரூ.1.87 கோடி மோசடி
ADDED : செப் 25, 2025 12:28 AM

மதுரை:இரிடியத்தை விற்றால் லாபம் கிடைக்கும் எனக்கூறி, ஐ.டி., ஊழியரிடம், 1.87 கோடி ரூபாய் மோசடி செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்த ஐ.டி., ஊழியர் ஒருவர் சென்னையில் பணிபுரிகிறார். இவருக்கு கோவை ஆனந்த் என்பவர், சுனில் என்ற பெயரில் வாட்ஸாப் அழைப்பில் அறிமுகமாகி, இரிடியம் தொடர்பான வீடியோவை அனுப்பினார். 3.75 கிலோ எடை கொண்ட அந்த இரிடியத்தை விற்றால், 1,000 கோடி ரூபாய் கிடைக்கும்; பார்ட்னராக சேருங்கள் என்றார்.
இதை நம்பிய ஐ.டி., ஊழியரிடம், இரிடியத்தின் உரிமையாளர் என கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த சரத்குமாரை பேச வைத்தார். பின், மூவரும் மதுரை வந்து ஓட்டலில் சந்தித்தனர்.
உண்மையான இரிடியமா என அதை உறுதி செய்ய, கொல்கட்டா கிறிஸ்டியன் டேவியஸ் ஆன்டிக் நிறுவன ஊழியர்கள் வருண் கிருஷ்ணா, ஜோசப், ஜோ, சாபு ஆகியோரிடம் ஐ.டி., ஊழியர் விசாரித்தார்.
பரிசோதனை என கூறி, 8.50 லட்சம் ரூபாய் பெற்றனர். பின், 'இது, 5 லட்சம் கோடி முதல், 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளது' என அவரிடம் கூறி, அவரை நம்ப வைத்தனர்.
சில நாட்களுக்கு பின் ஐ.டி., ஊழியரை தொடர்பு கொண்ட சுனில், இரிடியத்தை சரத்குமார் தன் நண்பருடன் கடத்தி சென்றுவிட்டார். அவர், மத்திய அமைச்சர் ஒருவரின் மகன். 3 கோடி ரூபாய் தந்தால் தான் இரிடியத்தை திருப்பி தருவேன் என நிபந்தனை விதித்ததாக கூறினார்.
இதில், தான் பலவிதமாக ஏமாற்றப்பட்டு, 1.87 கோடி ரூபாய் வரை இழந்தார் அந்த ஐ.டி., ஊழியர். இதையடுத்து, சமீபத்தில், மதுரை கமிஷனர் லோகநாதனிடம் அவர் புகார் அளித்தார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, சரத்குமார், 51, சுனில், 35, வருண்குமார், 40, ஆகியோரை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.