ADDED : பிப் 18, 2025 10:20 AM

சென்னை: மும்மொழிக்கொள்கையில் ஹிந்தி கற்பது கட்டாயமில்லை என தமிழக பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மும்மொழிக் கொள்கைக்கு தமிழக மக்கள் முழுஆதரவு கொடுப்பார்கள். மும்மொழிக் கொள்கையில் ஹிந்தி கற்பது கட்டாயமில்லை. தங்கள் விருப்பப்பாடமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை விருப்பப்பாடமாக மாணவ, மாணவிகள் படிக்கலாம். திராவிட மாடல் அரசு என்று மார் தட்டும் தி.மு.க., தமிழகத்தின் எல்லைக்குள் வாழும் மாற்று மொழியினரை அவரது தாய்மொழியை கற்கத்தடுப்பது ஏன்?
அதைக் கற்பிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதிப்பதன் நோக்கம் என்ன? தமிழகத்தில் வாழும் 2.5 கோடி மாற்றுமொழி பேசும் ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தமிழ் மாணவ,மாணவியர்களுக்கு 3-வது விருப்பமான பாடத்தை படிக்கும் உரிமையை தடுப்பது ஏன்? 1986லிருந்து நவோதாய பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்காமல் 7 லட்சம் மாணவ, மாணவியரின் இலவசக்கல்வி உரிமையை பறித்தது ஏன்?
சென்னையில் பிரெஞ்ச் நிறுவனத்தோடு ஒப்பந்தமிட்டு 1.2 இலட்சம் மாணவ,மாணவியருக்கு பிரெஞ்ச் கற்றுக்கொடுக்கும் தி.மு.க., அரசு கிராமங்களில் வாழும் ஏழை மாணவர்கள் அதைப்பெற தடுப்பது ஏன்? தமிழக மக்கள் இருமொழிக்கொள்கையின் இரட்டை வேடத்தை புரிந்துகொண்டார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன் எதிர்ப்பின் மூலம் மத்திய அரசுக்கு தமிழர்களின் தனித்துவத்தை காட்டுவோம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் மொழிகளின் அவசியத்தை புரிந்துகொண்ட மக்கள் தி.மு.க., அரசிற்கு நிச்சயம் ஆதரவளிக்க மாட்டார்கள்.வழக்கம் போல் வலுக்கட்டாயமாக கூட்டத்தை கூட்டினால் மட்டுமே உண்டு. இவ்வாறு ஜி.கே.நாகராஜ் கூறியுள்ளார்.

