மதுரை கள்ளழகர் கோயில் சொத்தை மீட்க கலெக்டருக்கு உத்தரவிட்டது சரியே
மதுரை கள்ளழகர் கோயில் சொத்தை மீட்க கலெக்டருக்கு உத்தரவிட்டது சரியே
ADDED : மார் 06, 2024 01:50 AM
சென்னை:மதுரை கள்ளழகர் கோயில் சொத்தை மீட்க, கலெக்டருக்கு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை அருகே மேலமடை கிராமத்தில், கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமாக நஞ்சை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள், கோவில் அர்ச்சகர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் வழங்கப்பட்டன. அர்ச்சகராக பணிபுரியும் வரை நிலங்களை பராமரித்து கொள்ளவும், அவற்றை விற்கக் கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிபந்தனைகள் மீறப்பட்டதாக கூறி, நிலங்களை மீட்பதற்கு, மதுரை வருவாய் கோட்ட அதிகாரியிடம், கள்ளழகர் கோயில் நிர்வாக அதிகாரி விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பத்தின் மீது, 2001 ஜூனில் ஆர்.டி.ஓ., ஒரு உத்தரவை பிறப்பித்தார். கோவில் விண்ணப்பத்தை ஆர்.டி.ஓ., ஏற்றதை, மாவட்ட கலெக்டர் ரத்து செய்து, சிவில் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் கள்ளழகர் கோவில் நிர்வாக அதிகாரி வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'அறங்காவலரின் விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது' என உத்தரவிட்டார்.
கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ., உத்தரவை ரத்து செய்தார். நிலங்களை மீட்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவும், தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுக்களை, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர்; அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன்; கோயில் நிர்வாக அதிகாரி சார்பில், மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் ஆஜராகினர்.
முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
கோயிலுக்கு அர்ச்சகர்கள் சேவை செய்தாலும், நிலங்களை மாற்றியும், விற்பனையும் செய்துள்ளனர்.
இந்த நிலங்களை மீட்பதற்கான கடமை, கலெக்டருக்கு உள்ளது. கடவுளின் சொத்தை, பெற்றோர் என்ற முறையில் நீதிமன்றம் தான் பாதுகாக்க வேண்டும்.
எனவே, நிலங்களை மீட்க, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு முறையானது தான். ஆர்.டி.ஓ., மற்றும் கலெக்டர் உத்தரவு தவறானது என தனி நீதிபதி உத்தரவிட்டதும் சரிதான். மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

