தி.மு.க.,விடம் பணம் வாங்கியது உண்மை: முத்தரசன் ஒப்புதல்
தி.மு.க.,விடம் பணம் வாங்கியது உண்மை: முத்தரசன் ஒப்புதல்
ADDED : ஆக 02, 2025 07:35 AM
திருவாரூர் : ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரம் தாழ்ந்து பேசுகிறார்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
கோவையில் பழனிசாமி பேசியபோது, 'கம்யூனிஸ்ட் கட்சிகள் கரைந்து போய்விட்டன; காணாமல் போய்விட்டன' என்றார்.
சிதம்பரத்தில் பேசியபோது, 'அ.தி.மு.க., கூட்டணிக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் வந்தால், ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்' என்றார்.
பின்னர், அ.தி.மு.க., கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் வர மாட்டார்கள் என தெரிந்ததும், 'கம்யூனிஸ்ட் கட்சிகள் பணம் வாங்கிக் கொண்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு அடிமையாகி விட்டன' என்கிறார்.
அவர் பேசுவதில் உண்மை இல்லை; தரம் தாழ்ந்து பேசுகிறார். இ.கம்யூ.,க்கு, தேர்தல் செலவுக்கு தி.மு.க., பணம் கொடுத்தது உண்மை; அதற்கான கணக்கை தேர்தல் கமிஷனுக்கு அளித்து விட்டோம்.
தமிழக அரசியல் வரலாற்றில், தேர்தல் முடிந்ததும், அந்த கூட்டணி கலைந்துவிடும்.
இது 1952ல் துவங்கி, அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா காலம் வரை நிகழ்ந்த உண்மை. ஆனால், தி.மு.க., கூட்டணி 2019ல் உருவாகி, தொடர் வெற்றியை பெற்று வருகிறது. இது, கொள்கை கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.

