'சுகுணா புட்ஸ்' உட்பட இரு நிறுவனங்களில் ஐ.டி., 'ரெய்டு'
'சுகுணா புட்ஸ்' உட்பட இரு நிறுவனங்களில் ஐ.டி., 'ரெய்டு'
ADDED : செப் 24, 2025 03:58 AM

உடுமலை:உடுமலை 'சுகுணா புட்ஸ்' நிறுவனம், நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் வீடு, அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறை சோதனை நடந்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை தலைமையிடமாக கொண்டு, 'சுகுணா புட்ஸ்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கறிக்கோழி உற்பத்தி, விற்பனை, கறிக்கோழி ஏற்றுமதி, கோழித்தீவன உற்பத்தி ஆலைகள் என, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் இந்த நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளன.
உடுமலை நேரு வீதியிலுள்ள, சுகுணா புட்ஸ் தலைமை நிறுவனத்தில், நேற்று காலை, வருமான வரித்துறை சிறப்பு பிரிவு கமிஷனர் பெர்ணான்டோ தலைமையில், 10 பேர் கொண்ட துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதே போல், கோட்டமங்கலம் வரதராஜபுரத்திலுள்ள தீவன உற்பத்தி ஆலையில், துணைக்கமிஷனர் ரவீந்திரன் தலைமையில், 12 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். உடுமலை கணபதிபாளையத்திலுள்ள தீவன உற்பத்தி ஆலையிலும் சோதனை நடக்கிறது.
இந்நிறுவன அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், காலை துவங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
'சுகுணா' நிறுவனம் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறது. உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் வியாபாரத்தை விரிவுபடுத்தி வருகிறது. இருந்தபோதிலும், நஷ்டக் கணக்கு காட்டி உள்ளனர்.
நஷ்டம் ஈட்டும் ஒரு நிறுவனம் வணிகத்தை விரிவுபடுத்துவது எப்படி என்ற சந்தேகம் எழுந்ததின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
நாமக்கல், எஸ்.ஜி., நகரை சேர்ந்தவர் வாங்கிலி சுப்ரமணியம், 62. இவர், 50 ஆண்டுகளாக நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில், முட்டைக்கோழி, கறிக்கோழி பண்ணை நடத்தி வருகிறார்.
தமிழகத்தின் பல இடங்களில், பிராய்லர் கோழிப்பண்ணைகளை, 'இண்டகரேஷன்' முறையில் நடத்தி வருகிறார்.
அவருக்கு சொந்தமான அலுவலகம், நாமக்கல் - திருச்சி சாலையிலும், கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகிறது.
சென்னை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 10க்கும் அதிகமான கார்களில், 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று காலை முதல், வாங்கிலி சுப்ரமணியத்திற்கு சொந்தமான வீடு, நிதி நிறுவனம், அலுவலகங்களில் திடீர் சோதனை செய்தனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடந்து வருகிறது.