UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 07:29 PM
சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் வி.ஆர்.துரை கூறியதாவது:
சென்னை கடப்பாக்கம், பாரிமுனை பகுதிகளில் நேற்று தலா 15 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மணலி புதுநகர், மணலியில் தலா 14 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அக்., 1 முதல், நவ., 1 வரையிலான காலத்தில் இயல்பாக 19 செ.மீ., மழை பெய்யும். தற்போது இந்த காலத்தில் 22 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பை விட 18 சதவீதம் அதிகம்.
தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும், ‘முரசு’ புயல் நேற்று மாலை நிலவரப்படி தெற்கு ஆந்திர கரையை நெருங்கியுள்ளது. இது, இன்று அதிகாலைக்குள் ஆந்திர மாநிலம், நெல்லுார் – நரசப்பூர் இடையே கரையை கடக்கக்கூடும்.
இதையடுத்து, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு கேரள பகுதியை ஒட்டி, வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
