ADDED : ஜன 03, 2025 12:13 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உறை பனி சீசன் துவங்கியது. வெட வெடக்கும் குளிரால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் டிச., இறுதியில் இங்கு குளிர் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஜனவரியில் துவங்கி பிப்ரவரி வரை பனியின் தாக்கம் அதிகரிக்கும்.
இச்சூழலில் காலையில் வெப்பநிலை அதிகரித்து இரவில் 5 டிகிரி செல்சியஸ் கீழ் பதிவாகும். இத்தருணங்களில் கொடைக்கானல் ஏரிப்பகுதி, மன்னவனுார் சூழல் சுற்றுலாமைய புல்வெளி, கீழ் பூமி, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உறை பனி நீடிக்கும்.
சில நாட்களாக பகல் நேர வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ், இரவில் அதிகபட்சமாக 6.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வானிலை மையமும் கொடைக்கானல், நீலகிரியில் உறை பனியின் தாக்கம் அதிகரிக்கும் என அறிவிப்பு வெளியிட்டது. அதற்கேற்றாற் போல் கீழ் பூமி, அப்சர்வேட்டரி, ஏரி பகுதிகளில் உறை பனி தாக்கம் துவங்கியது.
குளிரை சமாளிக்க சுற்றுலாப்பயணிகள், உள்ளூர்வாசிகள் ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆயத்த ஆடைகளை அணிந்து நடமாடுகின்றனர். மதியம் 3:00 மணிக்கு பனியின் தாக்கம் துவங்கி மறுநாள் காலை 10:00 மணி வரை நீடிக்கிறது.
இதனால் சரும வெடிப்புகளை சீர் செய்யும் மருந்துகளையும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆங்காங்கே தீ மூட்டி குளிரை சமாளிக்க பயணிகள் ஒன்று கூடும் காட்சிகளையும் காண முடிகிறது.
வரும் சில நாட்களில் பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

