'திட்ட செலவு அதிகம் என்பதால் கடன் பெறுவது இயற்கையானது!'
'திட்ட செலவு அதிகம் என்பதால் கடன் பெறுவது இயற்கையானது!'
ADDED : பிப் 15, 2024 01:59 AM
சென்னை:''திட்டங்களை செயல்படுத்த அதிகளவில் செலவழிக்க வேண்டியுள்ளதால், கடன் பெறுவது இயற்கையான ஒன்றாக அமைந்துள்ளது,'' என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில், அதிக கடன் வாங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து கூறினர். கடன்களை வாங்கி, மருத்துவக் கல்லுாரிகள், பாலங்கள் கட்டினோம். மூன்றாண்டு கால தி.மு.க., ஆட்சியில், 2.47 லட்சம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.
அமைச்சர் எ.வ.வேலு: ஜெயலலிதா ஆட்சியில்தான் முதல்முறையாக, 45,000 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், 55,000 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. கடன் வாங்கி ஊதாரித்தனம் செய்யவில்லை. இரண்டு கோடி பேருக்கு இலவச 'டிவி'க்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவுக் கடன், 7,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.
எம்.பி.,க்கள் 20 'கூப்பன்' வைத்திருப்பர். அதை வாங்கி காஸ் இணைப்பு வாங்கும் நிலை இருந்தது. அதை மாற்றி, 73 லட்சம் பேருக்கு காஸ் அடுப்புகள் வழங்கப்பட்டன. வாங்கிய கடனில் மக்களுக்கு தொண்டு செய்தோம்.
பழனிசாமி: எங்கள் ஆட்சியில் நாங்களும் அதைத்தான் செய்தோம். தி.மு.க., அரசு பொருளாதார நிபுணர் குழு அமைத்த பின்னர்தான், அரசின் கடன் அதிகரித்துள்ளதாக ஐயப்பாடு எழுகிறது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்தை ஆராய்வதற்காக, நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தியதில், தகுதியானவர்களுக்கு திட்டம் சென்று சேர்வதில், அந்த குழுவின் பங்களிப்பு இருந்தது.
அரசின் திட்டங்களுக்கும், மூலதன செலவிற்கும், கடன் பெறப்படுகிறது. மின்சாரத்திற்கு மட்டும், 15,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. மாநில அரசு நிதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.
மத்திய அரசு திட்டங்களில், நம் பங்களிப்புதான் அதிகம் உள்ளது. திட்டங்களை செயல்படுத்த அதிகளவில் செலவழிக்க வேண்டியுள்ளதால், கடன் பெறுவது இயற்கையான ஒன்றாக அமைந்துள்ளது. இது உங்கள் ஆட்சியிலும் இருந்தது; எங்கள் ஆட்சியிலும் இருக்கிறது.
பழனிசாமி: கடன் வாங்கி செலவு செய்ததை ஒப்புக் கொண்டதற்கு நன்றி.
இவ்வாறு விவாதம் நடந்தது.

