நாங்க இல்லை... அவங்க தான்! மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பித்த அதிகாரிகள்
நாங்க இல்லை... அவங்க தான்! மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பித்த அதிகாரிகள்
ADDED : டிச 28, 2024 12:24 AM

கோவை: கோவை மாவட்டம் சூலுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தாலுகாக்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்குட்பட்ட விவசாய விளை நிலங்களில், சிப்காட் தொழில் பூங்கா 1,360 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
இதற்கான நில அளவீட்டுப்பணி, சமீபத்தில் நிறைவடைந்தது. தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தி, மத்திய அரசிடம் ஒப்படைக்கும் என்ற தகவல், விவசாயிகள் மத்தியில் பரவியது.
போலீஸ் குவிப்பு
இதையடுத்து, மாவட்டம் முழுக்க உள்ள விவசாய சங்கங்கள், அமைப்புகள், சூழல் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், மூன்று தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கும் திட்டத்துடன், நேற்று கோவைக்கு வந்தனர்.
காலை நடைபெறுவதாக இருந்த, விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே விவசாயிகள் அரங்கில் குழுமியிருந்தனர்.
அங்கு சென்ற விவசாயிகள், அதிகாரிகள், விவசாயிகளின் இருக்கைகளை ஆக்கிரமித்து அமர்ந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 10:00 மணிக்கு கலெக்டர் கிராந்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மந்த்ராசலம், கலெக்டரிடம் சிப்காட் விவகாரத்தை விளக்கி கூறினார்.
இதை கேட்ட கலெக்டர், ''சிப்காட் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு, நில அளவீட்டுப்பணி மேற்கொண்டது. இதற்கும், தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. கோரிக்கைகளை மனுக்களாக கொடுங்கள். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்,'' என்றார்.
கோரிக்கை மனு
விவசாயிகள் சார்பில், சிப்காட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, 285 மனுக்களை கொடுத்தனர். அப்போது சூலுார் தொகுதி எம்.எல்.ஏ., கந்தசாமி, சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., கந்தசாமி, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் ஆகியோர், விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.
அதை பெற்றுக்கொண்டு கலைந்து செல்ல அறிவுறுத் தினார். அனைவரும் கலைந்து சென்றனர்.