பினாமி பரிவர்த்தனை தடுப்பு வழக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவருக்கு சிறை
பினாமி பரிவர்த்தனை தடுப்பு வழக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவருக்கு சிறை
ADDED : மார் 08, 2024 12:13 PM
சென்னை:பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை மண்ணடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், 2018 அக்., 6ல், வடக்கு பீச் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அவர் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்த முகமது பயாசுதீன் என்பதும், பையில் 34.60 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், 'அந்த பணம் எனக்கு சொந்தமானது அல்ல; வேறொருவர் கொடுத்து அனுப்பியது' என தெரிவித்துள்ளார்.
பல முறை வாய்ப்பு அளித்தும் பணம் கொடுத்து அனுப்பிய நபரை, விசாரணைக்கு முகமது பயாசுதீன் நேரில் அழைத்து வரவில்லை.
இதையடுத்து, வருமான வரித்துறையின் பினாமி தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு, போலீசார் தகவல் அளித்தனர்.
பின், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, பினாமி பரிவர்த்தனை தடுப்பு திருத்த சட்டத்தின் கீழ், முகமது பயாசுதீனிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
வருமான வரித்துறையின் பினாமி தடுப்பு பிரிவு துணை கமிஷனர், சென்னை 8வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை, நீதிபதி கே.தனசேகரன் முன் நடந்தது. வருமான வரித்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.ஷீலா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'முகமது பயாசுதீன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
'எனவே, அவருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 8.65 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது' என தீர்ப்பளித்தார்.

