மதுரையில் ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த காளைகள்; வீரத்துடன் மோதிய இளம் காளையர்கள்
மதுரையில் ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த காளைகள்; வீரத்துடன் மோதிய இளம் காளையர்கள்
UPDATED : ஜன 15, 2024 11:32 AM
ADDED : ஜன 15, 2024 08:11 AM

பொங்கல் திருநாளில் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆயிரம் காளைகள், 600 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார்.
அமைச்சர் மூர்த்தி மேற்பார்வையில் கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் சில நாட்களாக ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதில் பங்கேற்க 2400 காளைகள், 1318 மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனை, ஆதார் ஆவணங்களுடன் ஆன்லைனில் பதிவு செய்தனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்த மாவட்ட நிர்வாகம், ஆயிரம் காளைகள், 600 வீரர்களுக்கு அனுமதி அளித்தது. இன்று காலை 5:30 மணியளவில் மீண்டும் நடந்த கால்நடை டாக்டர்களின் பரிசோதனைக்குப் பின்பு வீரர்கள் களத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை பலர் காளைகளுடன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மாடுபிடி வீரர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம்- ரோட்டில் உள்ள குருநாதசுவாமி சமேத அங்காள ஈஸ்வரி கோயில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. அருகே வி.ஐ.பி.,க்கள் மேடை, காளைகள், வீரர்கள் காயமடையாத வகையில் ரோட்டில் 200 மீட்டருக்கு தேங்காய் நார்கள் விரிக்கப்பட்டுள்ளது. ரோட்டின் இருபுறமும் இரும்பு வலைகளுடன், மூங்கில் தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளது. இன்று காலை 6 மணி அளவில் வாடிவாசல் பூஜை நடந்தது. இது வரை நடந்த மருத்துவ பரிசோதனையில் ஒரே ஒரு காளைக்கு மட்டும் களத்தில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் காளையின் உரிமையாளர்கள் காளையின் மூங்கணாங்கயிறை அவிழ்ப்பதற்காக கத்தியோ அல்லது அரிவாளோ எடுத்து வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு முன்பு மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். உறுதியேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, எம்எல்ஏ., ராஜன்செல்லப்பா, துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சுவீதா , மாவட்ட போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கார் பரிசு
போட்டியில் வெல்லும் சிறந்த மாடு பிடி வீரருக்கும், சிறந்த காளை மாடுக்கும் தலா ஒரு கார் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தில் மாற்றம்
திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் வாகனங்கள் முத்துப்பட்டி பிரிவுவரை அனுமதிக்கப்படுகின்றன. அவனியாபுரம் ஊருக்குள் வாகனங்களுக்கு தடைவிதித்து, பைபாஸ் ரோட்டில் இயக்கப்படுகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஜல்லிக்கப்டில் ஏற்படக் கூடிய அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். விபத்துகளை எதிர்கொள்ளும் வகையில் 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. அவசர சிகிச்சைக்காக மருத்துவர்களும் செவிலியர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
நாளை (ஜன.,16) பாலமேட்டிலும், நாளை மறுநாள் (ஜன.,17) அலங்காநல்லுாரிலும் அவ்வூர் விழா கமிட்டி சார்பிலும் ஜல்லிக்கட்டு நடக்க இருக்கிறது. அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் ரூ.45 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில் போட்டிகள் எப்போது முதல் நடைபெறும் என்பது குறித்து ஜன.,23 ல் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்