கவின் கொலைக்கு ஜெயபால் சதி திட்டம் சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் அம்பலம்
கவின் கொலைக்கு ஜெயபால் சதி திட்டம் சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் அம்பலம்
ADDED : செப் 25, 2025 01:10 AM
சென்னை:துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த, மென்பொருள் நிறுவன ஊழியர் கவின், 27. கடந்த ஜூலை 27ம் தேதி, திருநெல்வேலி கே.டி.சி., நகரில் வெட்டிக் கொல்லப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட போலீஸ் விசாரணையில், 'இது ஆணவக் கொலை' என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, கவின் காதலித்த பெண்ணின் தம்பி சுர்ஜித் கைது செய்யப்பட்டார் .
தொடர் விசாரணையில், சுர்ஜித் பெற்றோரான தந்தை சரவணன், தாய் கிருஷ்ண குமாரி ஆகியோர், போலீஸ் எஸ்.ஐ.,க்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சரவணன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சுர்ஜித்தின் பெரியப்பா மகன் ஜெயபால், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது, கவின் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். சுர்ஜித், சரவணன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, கவின் கொலைக்கு, ஜெயபால் முக்கிய புள்ளியாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறியதாவது:
கவின் கொலைக்கு பின், ஜெயபால் ஆதாரங்களை அழிக்க உதவி செய்துள்ளார். கவினை கொலை செய்ய திட்டம் தீட்டிய நபர்களில், ஜெயபால் முக்கிய நபராக இருந்தது, எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், கவினை துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறுக்கு வரவழைத்து, தன் உறவுக்கார பெண் மீதான காதலை கைவிடுமாறு, அவர் மிரட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.