நவ., 2ல் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா தமிழகத்தை சேர்ந்த ஜீயர்கள் பங்கேற்கின்றனர்
நவ., 2ல் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா தமிழகத்தை சேர்ந்த ஜீயர்கள் பங்கேற்கின்றனர்
ADDED : அக் 23, 2025 12:23 AM

சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் வைணவ பெரியோர்களில் புகழுடைய எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ஜெயந்தி கொண்டாட்டம் ஆகியவை, சென்னை, காமராஜர் அரங்கில் நவ., 2ல் கொண்டாடப்படுகிறது.
இது குறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமெரிக்கை நாராயணன் கூறியதாவது:
வைணவ ஆச்சாரியார் ரா மானுஜர், வானமாமலை, திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கோவிலுார், ஆழ்வார் திருநகரி பிள்ளான், தொட்டாசார், எம்பார், ஆளவந்தார் உள்ளிட்ட 74 பீடங் களை நியமித்தார். அந்த சிம்மாசனாதிபதிகளின் வம்சத்தில், பல பீடங்களில் ஜீயராகவும், பல பீடங்களில் ஆச்சார்ய புருஷர்களாகவும் உள்ளனர்.
இந்த, 74 பீடங்கள் துவங்கிய காலக்கட்டத்தில் இருந்து ஒருங்கிணைக்கப்படாமல் இருந்தன. பல்வேறு காலக்கட்டங்களில் பல ஜீயர்கள் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் ஆசிர்வாதத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நானும் இந்த முயற்சியில் ஈடுபட்டேன்.
பெரு முயற்சி ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், ஆழ்வார் திருநகரி என, பல இடங்களில் ஆச்சார்யர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது அதில், தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஆச்சார்ய புருஷர்கள், ஜீயர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. பலரின் பெரு முயற்சியால், தற்போது தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை, நவ., 2ல் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழா சென்னை, காமராஜர் அரங்கில் நடக்க உள்ளது.
இந்த தென்னாச்சாரியார் சம்பிரதாயம் என்பது அய்யங்கார்களுக்கு மட்டும் இல்லை; அய்யங்கார் அல்லாத வைணவ சம்பிரதாயம் கடைபிடிக்கும் அனைவருக்கும் தான். இந்நிகழ்ச்சியில் வரலாறு காணாத வகையில், ஒரே மேடையில் ஜீயர்களும், ஆச்சார்ய புருஷர்களும் அலங்கரிக்க உள்ளனர்.
காலை 8:00 மணிக்கு, டாக்டர் வெங்கடேஷின் உபன்யாசத்துடன் விழா துவங்க உள்ளது. மதியம் வரை நடக்கும் விழாவில், ஜீயர்கள் அனைவருக்கும் அட்சதை ஆசிர்வாதம் செய்ய உள்ளனர்.
முன்பதிவு பிற்பகல், ஜீயர்கள் மற்றும் ஆச்சார்ய புருஷர்கள் ஒருங்கிணைந்து, தென்னாச்சாரியார் சம்பிரதாய சபையை வழிநடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளனர். விழாவில் நுால் ஒன்றும் வெளியிடப்படுகிறது. அதில், ஒவ்வொரு திருமாளிகை எனும் பீடம் குறித்த குறிப்பு, யார் தற்போதைய ஜீயர், ஆச்சார்ய புருஷர்கள் தொடர்பு எண்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழாவில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஜீயர்கள், ஆச்சார்ய புருஷர், தென்னிந்திய அளவில் பல ஜீயர்கள் பங்கேற்கின்றனர்.
விழாவில் ஆசீர்வாதம் பெற விரும்பும், அனைத்து ஹிந்துக்களும் பங்கேற்கலாம். பங்கேற்பாளர் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவிற்கான,'கியூ -ஆர்' கோடு உள்ளது. மேலும், 99410 03120 என்ற மொபைல் எண்ணில், 'மிஸ்டு கால்' கொடுத்து முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.